டில்லி,
கொஞ்சம் வசதி வாய்ப்புகள் வந்தாலே, எந்த கார் வாங்கலாம், எந்த பைக் வாங்கலாம் என மனது அலைபாயும். ஆனால், மிக உயர்ந்த பதவியான வெளிநாட்டு தூதர் பதவி வகிக்கும் ஒருவர் ஆடம்பர கார்களை விரும்பாமல் ஆட்டோவையே பயன்படுத்தி வருகிறார்…
வியப்பாக இருக்கிறதா…. ஆம். ஆடம்பர கார்களில் பவனி வரும் அயல்நாட்டு தூதர்களுக்கு மத்தியில் டெல்லியில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வருகிறார் வெளிநாட்டு தூதர் ஒருவர்.
தலைநகர் டெல்லியில் அனைத்து நாடுகளின் தூதரங்களும் செயல்பட்டு வருகிறது. அதேபோல் மெக்சிகோ நாட்டு தூதரகமும் உள்ளது.
ஆனால், மற்ற வெளிநாட்டு தூதர்களில் மெக்சிகோ தூதர் தனித்துவமாக திகழ்கிறார். அவர் பெயர் மெல்பா ப்ரியா.
பிற அயல்நாட்டு தூதர்களும், தூதரக அதிகாரிகளும் விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை பயன்படுத்தி வரும் வேளையில், மெக்சிகோ துாதர் மெல்பா ப்ரியாயோ தனது அலுவலக பயன்பாட்டிற்காக ஆட்டோவை பயன்படுத்தி வருகிறார்.
வெளிநாட்டு தூதர் என்ற முறையில் டெல்லியில் நடைபெறும் அனைத்து விழாக்களுக்கும், முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் மெல்பா எப்போதும் ஆட்டோவையே பயன்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து, மெல்பா ப்ரியா கூறியதாவது,
ஆரம்ப நாட்களில் ஆட்டோ பயனத்தின்போது பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும், தற்போது இதுபோன்ற பிரச்சனைகள் ஓரளவு குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தம்முடைய ஆட்டோவை மட்டுமல்லாமல் பிற ஆட்டோக்களையும் 5 நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறார்.
இவர் பயணம் செய்யும் ஆட்டோவில், பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சீட் பெல்ட், தீ தடுப்பு உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.
அவரது வாகனம் ஆட்டோவாக இருந்தாலும், மற்ற தூதரக வாகனங்களுக்கு அளிக்கப்படுவது போன்றே வாகன எண் இந்த ஆட்டோவிற்கும் டெல்லி அரசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டோ குறித்து ஓட்டுநர் ராஜேந்திரகுமார் கூறும்போது, வெளிநாட்டு தூதர் ஒருவருக்கு இதுபோன்று ஆட்டோ ஓட்டுவது தனக்கு பெருமை என்று கூறினார்.
மெல்பா ப்ரியா பெரும்பாலும் ஆட்டோவிலேயே டெல்லியை சுற்றி வருகிறார். பிற நகரங்களுக்கு செல்லும் போது மட்டும் கார்களை பயன்படுத்தி வருகிறார்.