டில்லி:
500 மற்றும் 1,000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். இதையடுத்து நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடே ஸ்தம்பித்துள்ளது. இன்னும் நோட்டுத் தட்டுப்பாடு தீரவில்லை. இந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்பியதால், நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இதனிடையே, மோடியின் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, மத்திய அரசின் முடிவுக்கெதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் எதிர்க்கட்சிகள் சார்பில் வரும் 28ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு செல்லாது பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். காலை 10 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த சந்திப்பில் நிதி மந்திரி அருண் ஜெட்லியும் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.