“சென்னையை சிங்கப்பூர் ஆக்குவோம், ஹாங்காங் ஆக்குவோம்” ஆண்டவர்களவும் ஆள்பவர்களும் சொல்லியதைக் கேட்டு அலுத்துப்போய்விட்டோம். அவர்களது கைங்கரியத்தைல், சென்னை மாநகர், சீனத் தலைநகர் பீஜிங் போல ஆகியிருக்கிறது.
ஆமாம்.. பீஜிங்கில் தூசுப்படலம் அதிகமாகி, நல்ல காற்றை சுவாசிக்க வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள் அல்லவா? (இது குறித்த நமது செய்தி: http://patrikai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D/)
இப்போது சென்னையும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.
“சென்னையில் வெள்ளம் வடிந்த சாலைகளில் மண் புழுதி எழுந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட ஐந்து மடங்கு கூடுதலாய் தூசிப்படலம் காற்றில் இருக்கிறது” என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செனனை புழுதி பற்றி, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ள கருத்து:
“பீஜிங் நகரின் மாசுப்பாட்டிற்கு ஒத்ததாய் இருக்கிறது சென்னையின் மாசுபாடு. எந்த சாலையிலும் செல்ல இயலாத நிலையில் புழுதி பறந்து கொண்டிருக்கிறது. 3 கிமீ பயணம் செல்வதற்குள் கடுமையான கண்ணெறிச்சலும், புழுதியும் நம்மை ஆட்டுவிக்கின்றன. வீட்டின் அனைத்து மூலைகளிலும் தூசிகள் படிந்து கிடைக்கின்றன.
வீட்டு ஜன்னலின் ஓரம் படிந்திருக்கும் தூசினை பார்க்கும் போதெல்லாம் , ‘ இந்த தூசியை குப்பையை துடைக்க சிரமமாய் இருக்கும் நமக்கு , இதே அழுக்கு தூசி நம் நுரையீரலில் படிந்து கிடப்பதை எப்படி சரி செய்வது , நம் அருகே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் நுரையீரலை நிரப்பும் இந்த தூசினையும், ஆபத்தான காற்றினையும் எதைக்கொண்டு சுத்தம் செய்ய முடியும்? ஒரு மனிதனின் ஆரோக்கியமே சுவாசத்தில் அடங்கி இருக்கும் பொழுதில், இந்த மாசுபட்ட காற்றினை சுவாசிக்கும் அவலத்திற்கு உண்டாக்கிய அரசின் மீது எப்படி நாம் கோபம் கொள்ளாமல் இருக்க முடியும்?
வார்டு மெம்பர் வரை 20 லட்ச ரூபாய் காரில் சென்று கொண்டிருக்கும் இந்த குப்பை அரசியல் புரோக்கர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட போவதில்லை. இவர்களது குழந்தைகள் நுரையீரலும் இவ்வாறு பாதிக்கப்பட போகிறது என்பதைப் பற்றிய அறிவும், அக்கரையும் கொண்டவர்களல்ல இவர்கள், இந்த முட்டாள் சுயநல கூட்டம் ஆட்சி செய்யும் யோக்கியதையை நாம் 40 வருடங்களாக பார்த்துவருகிறோம். இவர்கள் செய்யும் ஊழலைப் பற்றி பெரிய அளவில் நாம் கொந்தளித்ததும் கிடையாது. ஆனால் இன்று நடந்து கொண்டிருக்கும் மாசுபாடும், சூழலியல் அழிப்பும் நம் குழந்தைகளின் தலையில் விடியப் போகிறது என்பதை சிந்திக்கும் பொழுது நமது கையாலாகத்தனத்தினை எண்ணி கோவப்படாமல் இருக்க முடியவில்லை.
சென்னையின் மேயரும், நம் ஏரியா கவுன்சிலருடைய வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டு நம்முடைய இரண்டு சக்கரவாகனங்களில் ஒரு நாள் முழுவதும் இந்த நகரத்தினை சுற்றிவரவைக்கும் தண்டனையே ஒரு பெரும் தண்டனையாக அமையும் இவர்களுக்கு.
இந்த மாசுபாட்டினை நீக்குவதற்குரிய நடவெடிக்கையை உடனடியான குரலை நாம் எழுப்புதல் வேண்டும். இல்லையெனில் கவுன்சிலர்கள் பயன்படுத்தும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனத்தினை அனைத்து சென்னை வாசிகளுக்கும் அதிமுக அரசு இலவசமாக வழங்கட்டும்.
சாலையைக் கூட ஒழுங்கா போட முடியாத வக்கற்ற அரசுகளைத் தான் நாம் மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
இந்த அரசின் கையாலாகத்தனத்திற்காக நம் குழந்தைகள் உடல்நலம் சிதைக்கபடுவது கவலைக்குரியது, கண்டனத்திற்குரியது!” – இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் திருமுருகன் காந்தி.