நாகர்கோவில்:
சென்னையில் கனமழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து தமிழக அரசுக்கு தகவல் அளித்தோம். ஆனால் அதை கவனத்தில்கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்யவில்லை என்று இஸ்ரோ- விஎஸ்எஸ்சி இயக்குநர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், “வானிலையை முன்கூட்டியே அறிய நவீன கருவிகள் இல்லை” என்று சமீபத்தில் கூறிய பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்பு மணி ராமதாசுக்கும் மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம் இஸ்ரோ-விஎஸ்எஸ்சி இயக்குநர் சிவன் நாகர்கோயிலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தெரிவித்ததாவது:
“சென்னையில் கடுமையான கனமழை பெய்யும் என்று ஆய்வு மூலம் 10, 15 நாட்களுக்கு முன்னரே கணித்தோம். இது குறித்த அறிக்கைகளையும் வெளியிட்டோம். தமிழக அரசுக்கும் அனுப்பினோம்.
ஆனால் இந்த கன மழையை எதிர்கொள்ள தமிழக அரசு முறையான முன்னேற்பாடுகளை செய்யவில்லை” என்றார்.
அதே நேரம்,” இதற்காக யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. மழை வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை” என்றார்.
மேலும் சமீபத்தில் “வானிலையை முன்கூட்டியே அறிய போதுவான நவீன கருவிகள் இங்கே இல்லை” என்ற பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணிக்கும் மறைமுகமாக பதில் அளித்தார்.
“வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் வானிலை தகவல்களை முன்கூட்டியே சரியான முறையில் அறிந்துகொள்ளும் வசதிகள் இருக்கின்றன” என்றார்.
தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க தரப்பில் பேச்சாளர்கள் கே.ஆர். சரஸ்வதி, “மழை என்ன போன் போட்டு சொல்லிவிட்டா வரும்” என்று டி.வி. விவாதத்திலேயே பகிரங்கமாக கேட்டார்.
மழை நிவாரண நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய நடிகர் கமல்ஹாசனை, கடுமையாக விமர்சித்தார் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
இந்த நிலையில் இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ள கருத்து, தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டியுள்ளது.