சங்கத்து பெயரே டெடரா இருக்குல்லே..?
இவங்க கோரிக்ககளும் அசரடிக்குது. வரும் டிசம்பர் ஏழாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகும் இவர்களது கோரிக்கை, “மழை வெள்ள பாதிப்பால் டாஸ்மாக் மது குடிப்போர் கூலி வேலைக்குப்போகமுடியவில்லை. குவார்ட்டர் வாங்கக்கூட முடியவில்லை. ஆகவே வரும் டிசம்பர் மாதம் முழுதும் டாஸ்மாக் மது வகைகளை, 50 சதம் தள்ளுபடி விலையில் விற்க வேண்டும்” என்பதுதான்.
இன்று வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் என்று சமூகவலைதளங்களில் இதுதான் பேச்சு! விடுவோமா… குடிகாரர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பொன்.குமாரசாமியை பிடித்து சில கேள்விகளைக் கேட்டோம்.
“எப்போ இந்த சங்கத்தை ஆரம்பிச்சீங்க.. எத்தனை பேரு உறுப்பினரா இருக்காங்க?”
“2009ம் வருசம் சங்கத்தை ஆரம்பிச்சோம். போன வருசம் பதிவு பண்ணேம். மாநில அளவுல ஆயிரம்பேரு உறுப்பினரா இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் மாவட்ட அளவுல பொறுப்பு கொடுத்திருக்கோம். சீக்கிரம் நிறைய பேரு சேருவாங்க!”
“இதுக்கு முன்னால என்னென்ன கோரிக்கை வச்சீங்க..?”
“மது குடிக்கிறவங்க பல பேரு, நிதானம் இல்லாம ஆடை விலகி நடுரோட்டுல கிடக்காங்க. இதனால அவங்க மானம் போறதோட, பார்க்கறவங்களுக்கும் சிக்கலாயிடுது. அனதனால மது குடிக்கறவங்க, டவுசர் மாடல் ஜட்டி போட்டுக்குங்கன்னு விழிப்புணர்வு பிரச்சாரம் செஞ்சோம்.
மது குடிச்சு நடுத்தர வயசுலேயே பல பேரு மேலே போயி சேர்ந்துர்றாங்க. அவங்க குடும்பம் குட்டிங்க சிரமப்படுதுங்க. அதனால, மதுகுடிச்சி இறந்தவங்களோட மனைவி குழந்தைங்க நலனுக்காக மாதம் அய்யாயிரம் ரூபா உதவித்தொகை கொடுக்கணும், மதுவால கணவன இழந்த இளம் விதைங்க சொந்தத் தொழில் செய்ய அம்பதாயிரம் ரூபா உதவி நிதி அளிக்கணும்னு கோரிக்க வச்சு உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்!”
“சரி, இப்படி போராட்டம நடத்தறதுக்கு பதிலா, மதுக்கடைகளை ஒழிக்கணும்னு போராடலாமே..!”
“அதுக்கும் ஒரு அருமையான வழி சொன்னோம். நாடு முழுசும் இருக்குற டாஸ்மாக்கடைகளை மூடணும். அதுக்கு பதிலா, மாவட்டத்துக்கு ஒரு பெரிய இடத்த தேர்ந்தெடுத்து அங்க எல்லாவகை மதுவும் கிடைக்கிற மாதிரி மது மால் வைக்கணும். சென்னையில, தீவுத்திடல்ல வைக்கலாம்.
குடிக்கணும்கிற கொள்கை (!) இருக்கிறவங்க அங்கவந்து குடிச்சி, சாப்பிட்டு, தங்கிட்டு போயிடலாம். ஏன்னா, டாஸ்மாக்ல குடிச்சிட்டு போனா போலீஸ் புடிக்குது. இல்லேன்னா விபத்து ஆகி, குடிக்கதவங்களும் பாதிக்கப்படறாங்க. வீட்டுல குடிக்கலாம்னா பிள்ளைங்க கெட்டுப்போகுது. அதனால இந்த குடிமால் துவங்கினா குடிக்கறவங்களுக்கும் நல்லது. தவிர, தூரமா இருக்கேன்னு குடிக்கிறவங்க எண்ணிக்கையும் குறையும். இதை அமல் படுத்தினா ரெண்டே வருசத்துல முழு மதுவிலக்கு வந்துடும்!”
“ஐடியா அருமையா இருக்கே.. இதை தமிழக அரசுகிட்ட வலியுறுத்தலாமே..”
“மதுவிலக்குத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சந்திச்சி இதைச் சொன்னோம். ஏற்கெனவே நாங்க ராஜபாளையம், ஸ்ரீரங்கம், ஆர்.கே. நகர் தொகுதிள்ல போட்டியிட்டோம் இல்லையா? அதை மனசுல வச்சுகிட்டு, “நீங்களே தேர்தல்ல நிக்கிறீங்களே.. ஜெயிச்சி இதையெல்லாம் அமல்படுத்துங்க”னு அமைச்சர் சொல்லிட்டாரு!”
“வேற என்னன்ன ஐடியா வச்சுருக்கீங்க..?”
“சாராயத்தால அரசுக்கு இருபது கோடி வரை வருமானம் வருது. அதுல பத்து பிரசண்ட், மது மருத்துவத்துக்கா செலவு செய்யணும். ஒவ்வொரு மாவட்டத்திலயும் தனியா “மது சிகிச்சை மையம்” ஆரம்பிக்கணும். மதுவால பாதிக்கப்பட்டவங்களுக்கு சிறந்த சிகிச்சை அங்க செய்யணும். இதை வலியுறுத்தி இப்போ சட்டசபை நடந்தப்போ கோட்டை கிட்ட உண்ணாவிரதமே இருந்தோமே!”
“டாஸ்மாக்க எதுத்து பாடி, சிறைக்கு போன கோவன், இப்போ எதிர்க்கட்சி தலைவருங்களை சந்திச்சு ஆதரவு திரட்டராறே.. அது மாதிரி நீங்களும் ஒரு ரவுண்டு வரலாமே!”
“யாரை சந்திக்க சொல்றீங்க. எல்லாருமே திருடங்கதான்! சாராய கடைகளை திறந்துவச்சதே கருணாநிதிதான். அஞ்சு தடவை முதல்வரா இருந்தப்போ வராத ஞானோதயம் இப்பத்தான் அவருக்கு வந்துருக்கு. திடும்னு, “ஆட்சிக்கு வந்தா முழு மதுவிலக்க அமல்படுத்துவோம்”னு அறிவிக்கிறாரு. அது நம்பற மாதிரியா இருக்கு? முதல்ல, அவரு கட்சிக்காரங்க நடத்தற அஞ்சு மது ஆலைங்கள மூடச்சொல்லுங்க!
அவருன்னு இல்லே, வைகோ, ராமதாஸ், கம்யூனிஸ்டுங்கன்னு யாரு மேலயும் எங்களுக்கு நம்பிக்கை இல்லீங்க! இவங்க கட்சிக்காரங்க சாராய ஆலை வச்சிருக்கலைதான். ஆனா திமுக – அதிமுகவோட இவங்க கூட்டணி வச்சாங்களே.. அப்ப, “உங்க கட்சிக்காரங்க நடத்துற சாராய ஆலைங்கள மூடச்சொல்லுங்க.. அப்பத்தான் கூட்டணி வைப்போம்”னு சொல்லியிருக்கலாமே.. இல்லேனா மதுவிலக்க அமல்படுத்துங்க அப்பத்தான் கூட்டணினு சொல்லியிருக்கலாமே.. சொல்லலியே!
ராமதாசு ரொம்ப நாளா மதுவிலக்கு, மதுவிலக்குனு போராட்டம் எல்லாம் நடத்தறாரு. அவரு கட்சி கூட்டம் நடக்கறப்பதான் மது விற்பனை அதிகரிக்குது. “மதுகுடிக்கிறவங்கள கட்சியிலேருந்து விலக்கப்போறோம்”னு சொல்றாங்களா.. அவ்வளவு ஏன்.. இப்ப எந்த கட்சிக்காரங்க ஒயின்ஷாப் பார் நடத்தலை? சொல்லுங்க பாப்போம்!”
“என்னங்க இது.. கோவனைவிட கோவக்காரரா இருக்கீங்களே..! சரி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கிட்ட உங்க கோரிக்கைகளை சொல்லலாமே..!”
“உண்மைதாங்க.. இருக்கிறதிலேயே அவரு நல்ல மாதிரியாத்தான் தெரியறாரு. அவரு மேல ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியல… அதனால அவரை அமுக்க குடிகார பட்டம் கட்டுறாங்க! இந்த காலத்துல குடிக்காதவங்க யாருங்க இருக்காங்க?
(சற்று இடைவெளிவிட்டு) மதுவிலக்கு வேணும்னு கோயம்பேடு கட்சி ஆபீஸ்ல உண்ணாவிரதம் இருந்தாரே… அப்ப எங்க எங்க உறுப்பினர் ஐம்பது பேரோட மனு கொடுக்க போனோம். ஆனா அவங்க கட்சியோட சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.எம். காமராஜ் தடுத்துட்டாரு. அவரு எங்ககிட்ட, “உங்க கோரிக்கைங்க எல்லாம் நியாயமாத்தான் இருக்கு. ஆனா இப்போ நீங்க கேப்டனை சந்திக்கறது சரிவராது. ஏன்னா ஏற்கெனவே கேப்டனை குடிகாரருன்னு விமர்சனம் பண்றாங்க. இப்ப நீங்க வந்தீங்கன்னா, குடிகார சங்கமும் குடிகாரங்களும் ஒண்ணா சேர்ந்துட்டாங்கன்னு விமர்சிப்பாங்க”னு விளக்கம் சொன்னாரு. அவரு சொன்னது சரின்னு பட்டுச்சு. அதனால காமராஜூகிட்டயே எங்க கோரிக்கை மனுவ கொடுத்துட்டு திரும்பிட்டோம். அவரு மூலமா எங்க கோரிக்கைங்க கேப்டன்கிட்ட போயிடுச்சு. நிச்சயமா அவரு ஆட்சிக்கு வந்தா அதையெல்லாம் நிறைவேத்துவாரு!”
“சாராயத்தை ஒழிக்கவும் வழிசொல்றீங்க..அப்புறம் ஏன் “தமிழ்நாடு குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்” நடத்தறீங்க..?
”சங்கத்து பேரை கவனிச்சு படிங்க.. குடிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படணும்னு சங்கம் நடத்தறோம். அதான் அர்த்தம்! ஏமாறக்கூடாதுனு! அதே போல படிப்படியா முழு மதுவிலக்கு வேணும்கிறதுதான் எங்க கொள்கையும்!”
“ஓ.. குடிக்கறவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தறீங்களா.. டாஸ்மாக் பாருக்கு போயி பிரச்சாரம் செய்வீங்களா?
“ஆமாங்க..! குடி மறுப்போர் சங்கம்னு வச்சிகிட்டா, பாருக்குள்ள போக முடியுமா? குடிகாரங்க, பாட்டிலாலேயே அடிப்பாங்க! அதனாலதான் இந்த பெயரு. பாருக்கு போயி, “குடிக்கிற பெருமக்களே.. நீங்க குடிக்கிற மதுவுல என்ன இருக்கு தெரியுமா, இதோட பாதிப்பு தெரியுமா, இதனால அரசுக்கு வர்ற வருமானம் எவ்வளவு…” அப்படின்னு பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!”
“சரி, குடிக்கறவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினா ஆளுங்கட்சிக்கு எதிரான பிரச்சாரம் ஆயிடுமே..! இதுவரைக்கும் பிரச்சினை வந்ததில்லையா?”
“ஏன் வராம… ? எங்க சங்கம் சார்பா, மதுகுடிப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை முதல் கன்னியா குமரி வரை சைக்கிள் பேரணி புறப்பட்டோம். அதுல தலைவிரி கோலமா ஒரு பெண்மணி பொம்மையும், பக்கத்துல சாராய பாட்டில் உருவப்படமும் வச்சிருந்தோம். சாராயத்தால பெண்கள் பாதிக்கப்படுறாங்களே.. அதை குறிப்பிட..! அதைப்பார்த்துட்டு, இது முதல்வரம்மா உருவமானு சொல்லி அ.தி.மு.க.காரங்க சிலபேரு பிரச்சினை பண்ணாங்க.. “இது பொதுவான தமிழக பெண்ணை குறிக்கிற பொம்மைதாங்க.. போலீஸ்லயும் அனுமதி வாங்கித்தான் பிரச்சாரம் செய்யறோம்”னு சொல்லியும் அவங்க கேக்கலை. அப்புறம் அந்த படத்தை எடுக்கவேண்டியதா போச்சு!”
“உங்க கோரிக்கைங்க வேற என்ன இருக்கு?”
“இப்போ எரிசாராயத்துலேருந்து சாராயம் தயாரிக்கிறாங்க. இது உடம்புக்கு ரொம்ப கெடுதல். அதனால கரும்புலேருந்து ஆல்கஹால் தயாரிக்கணும். அப்படி செஞ்சா பெரிய தீமையும் கிடையாது. கரும்பு விவசாயிக்கு இப்ப மாதிரி ஆயிரம் கோடி ரூபா பாக்கி வைக்க வேண்டிய அவசியமும் இருக்காது. அதனால கரும்புலேருந்து சாராயம் தயாரிக்கணும்னு கோரிக்கை வைக்கிறோம்!”
“சரி, நீங்க ஒரு நாளைக்கு எத்தனை குவார்ட்டரு குடிப்பீங்க..?”
“அய்யய்யோ… நானும் சரி, எங்க தலைவர் செல்லப்பாண்டியனும் சரி.. இதுவரைக்கும் மது குடிச்சதே கிடையாதுங்க!”
(பின் குறிப்பு: போஸ்டரில் இருப்பவர்தான் நமக்கு பேட்டி அளித்த “தமிழ்நாடு குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்க” மாநில பொதுச் செயலாளர் பொன். குமாரசாமி. முகப்புப்படத்தில் இருப்பவர் அதை சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன். குமாரசாமியிடம் புகைப்படம் கேட்டபோது, “எனது படம் செல்லப்பாண்டியனிடம் இருக்கிறது. அவரை அனுப்பச் சொல்கிறேன்” என்றார். செல்லப்பாண்டியனிடம் பலமுறை கேட்டும், அவர் தனது படத்தை மட்டுமே அனுப்பினார். ஆகவே அவரது படத்தையே முகப்புபடமாக போட்டுவிட்டோம்!)
பேட்டி: டி.வி.எஸ். சோமு