டில்லி: தமிழக அரசின் அவதூறு வழக்கு தொடர்பாக உச்சமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ஏன் தமிழ்நாட்டில் மட்டும் அவதூறு வழக்குகள் அதிகமாக தொடரப்படுகின்றன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதுதான் எதிர்கட்சிகள் பணி. அதற்கு எல்லாம் அவதூறு வழக்குகள் தொடர்வதா? அரசு எந்திரம் சரியாக இயங்காததாலேயே விமர்சனங்கள் எழுகின்றன” என்று தமிழக அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில் பாடகர் கோவன் குறித்த வழக்கில் மீண்டும் தமிழக அரசை உச்சமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மதுவிலக்கை வலியுறுத்தி “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை பாடியதற்காக பாடகர் கோவன் சமீபத்தில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதோடு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற போலீசாரின் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “தனிப்பட்ட ஒரு சாமானியனுக்காக தமிழக அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது? அதுவும் தனிமனிதர் ஒருவருக்கு எதிரான இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் ஆஜராக வேண்டுமா? என்று கேட்டார்கள். மேலும் குறிப்பிட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடி செய்தனர்.