ராமகிரி நகர் மெயின்ரோடு
ராமகிரி நகர் மெயின்ரோடு

சென்னை:

வியாசர்பாடியில், தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து நேற்று ஒரு பெண் உயிரிழந்தார்.  மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து பொதுமக்கள் பலியாவது தொடர்கதை ஆகிவிட்டது. ஆனால், மின்வாரியம் இன்னும் தனது அலட்சியபோக்கை கைவிடாததால் மக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் மனைவி குழந்தையை இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளைஞர், சாலையில் தேங்கியிருந்த நீரில் கால்வைத்தார். அதில் மின்சாரம் பாய்ந்திருந்ததால் அவர் தூக்கி எறியப்பட்டு மரணமடைந்தார்.

 

3

அதன் பிறகு வேளச்சேர் பகுதியில் இதே போல மின்சார ஒயர் விழுந்து தம்பதி பலியானார்கள். அவர்களது நான்கு மற்றும் இரு வயது குழந்தைகள் இன்று அநாதையாக தவிக்கின்றன.

இந்த நிலையில் நேற்று வியாசர்பாடியில் அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்ததால் லட்சுமி என்ற பெண் மரணமடைந்தார்.  அவர் அழைத்துச் சென்ற பசுமாடும் மின்சாரம் பாய்ந்து பலியானது.

தற்போது லட்சுமியின் உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை மின்சாரம் தாக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனால் மின்வாரியத்தினர் இன்னு்ம் அலட்சியமாகவே செயல்படுகிறார்கள்.

 

1

இன்று காலை நாம் கண்ட காட்சி இதை உணர்த்துகிறது.  தரமணி லிங்க் சாலையில், ராமகிரிநகர் மெயின்ரோட்டில் மின்சார கம்பத்தில் இருந்து கேபிள் ஒயர்கள் தரையில் விழுந்து கிடக்கின்றன.   .  மின்சாரமும் அந்த பகுதியில் இருக்கிறது. ஆகவே மின்சாரம் பாய்ந்து பொதுமக்கள் பலியாகும் அபாயம் இருக்கிறது.

இதைப் பார்த்து பதைபதைத்து, மின்வாரிய எண்ணை தொடர்புகொண்டோம். ஆனால் போன் எடுக்கப்படவில்லை.

மின்வாரியத்தினரின் அலட்சியம் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. ஏற்கெனவே வேளச்சேரியில் மின்சாரம் பாயந்து தம்பதியர் மரணமடைந்தபோது பொது மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.