நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.கவில் இணைந்தார் தி.மு.க எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன். இந்த நிலையில் மீண்டும் அவர் அ.தி.மு.கவில் சேரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழம்பாமல் மேலே படியுங்கள். அ.தி.மு.கவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.கவில் இணைந்தார். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
தூத்துக்குடி தி.மு.க. மாவட்ட செயலாளரான பெரியசாமியுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சிப் பணி எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில், அவர் அ.தி.மு.கவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த மே 14-ஆம் தேதி திமுகவிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதற்கு அனிதா ராதாகிருஷ்ணன், ” என்னை நிரந்தரமாக நீக்கினால் மிகவும் மகி்ழச்சியடைவேன்” என்று புன்னகையுடன் தொிவித்துள்ளாா்.
மேலும் அப்போது அப்போதுதான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து பேசிய அனிதா, :சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதா போட்டியிட வசதியாக நான் வென்றுள்ள திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார்.
அதோடு, “தன்னை அ.தி.மு.கவில் சேர்த்துக்கொள்ளும்படி அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் கடிதம் கொடுத்தார் அனிதா. அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று பேசப்பட்டது.
இதற்கிடையே, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அனிதா பேசினார். அடுத்தகட்டமாக, தூத்துக்குடி பெரியசாமியோடு இணைந்து கோபாலபுரம் இல்லத்துக்கு அனிதா ராதாகிருஷ்ணன் வந்தார். அங்கு கருணாநிதியைச் சந்தித்து, திமுகவில் மீண்டும் இணைந்தார். மு.க.ஸ்டாலினிடமும் வாழ்த்து பெற்றார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனிதா “கடந்த ஆறு மாதமாக கருணாநிதியையும், ஸ்டாலினையும் சந்திக்காமல் இருந்தேன். அது ஒரு துன்பமான காலம். இனி கட்சியின் வளர்ச்சிக்காக நானும் பெரியசாமியும் இணைந்து பணியாற்றுவோம் என்றார். அருகில் இருந்த பெருயசாமியும், “எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. இனிகட்சி வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றுவோம்” என்றார்.
இது நடந்து ஒரு நாள் முடிவதற்குள், “அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.கவில் இணையப்போகிறார்” என்று தகவல் பரவிவருகிறது. இது குறித்து அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
“அ.தி.மு.கவில் இணைய விருப்பம் தெரிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் மனு கொடுத்தார். அவர் வந்தால், தங்கள் பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்று நினைத்த சில தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிளும், அப் பகுதி அமைச்சரும், அந்த கடிதம் தலைமைக்கு செல்லாதபடி பார்த்துக்கொண்டார்கள். இந்த நிலையில் பதிலே இல்லாததால் நேற்று தி.மு.கவில் இணைந்தார் அனிதா. இதை அறிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விசாரித்திருக்கிறார். அனிதாகவின் கடிதம் மறைக்கப்பட்டது தெரிந்து கோபப்பட்டார். அனிதாவுக்கு விருப்பம் இருந்தால் கட்சியில் சேரட்டும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அனிதாவிடம் அ.தி.மு.க. சார்பில் பேசப்பட்டது.
அனிதாவோ, தான் இத்தனை நாள் காத்திருந்து வேறு வழியின்றி மீண்டும் தி.மு.கவில் சேர்ந்திருக்கிறேன். திடுமென அ.தி.மு.கவில் சேர்ந்தால் நன்றாக இருக்குமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அ.தி.மு.க. சார்பில், மிசா பாண்டியன் அ.தி.மு.கவில் சேர்ந்தது குறித்து நினைவு படுத்தப்பட்டது. அதாவது முதல் நாள் கருணாநிதியை சந்தித்த மிசா பாண்டியன், மறுநாள் அ.தி.மு.கவில் சேர்ந்தார். ஆகவே இது பெரிய விசயம் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. அனிதா யோசனையில் இருக்கிறார்” என்று அ.தி.முக. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி ஒரு தகவல் பரவி வருவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.