இனி டெல்லி விமான நிலையம் வரும் பயணிகள் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்கேனர் மூலம் முழு உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அதன் முதற்கட்டமாக வரும் திங்கட்கிழமை முதல் இந்த பரிசோதனை டெர்மினல்-3யில் சோதனை ஓட்டமாக தொடங்கப்படவுள்ளது.
ஜெர்மனி மற்றும் அமெரிக்க தயாரிப்புகளான இரண்டு ஸ்கேனர்கள் பரிசோதனை முயற்சியாக பயன்படுத்தப்படவுள்ளன. அடுத்தவாரம் ஜெர்மன் ஸ்கேனர் டெல்லி வந்தடைய இருக்கிறது. இவை “மில்லிமீட்டர் வேவ் டெக்னாலஜி” என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குபவை ஆகும். இந்த இரு இயந்திரங்களில் எது சிறப்பாக செயல்படுகிறதோ அது நிரந்தரமாக பயன்படுத்தப்படும்.
உடற்பகுதிகளை வெளிப்படுத்தாத வகையில் இந்த ஸ்கேனர் செயல்படும் எனவே பயணிகள் இதுகுறித்து அச்சமடைய தேவையில்லை. மேலும் இந்த ஸ்கேனர் வெளியிடும் கதிர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காததுதான் என்று டெல்லி விமானநிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Photo Credit: Hindustan Times
பயணிகள் போர்டிங் பாஸ் வாங்கியபின்பு இந்த ஸ்கேனர் வழியாக செல்ல கேட்டுக்கொள்ளப்படுவார்கள். இதுதவிர வழக்கமான நடைபெறும் பாதுகாப்பு பரிசோதனைகள் எப்போதும்போல நடைபெறும். சோதனை ஓட்டத்தின்போது எல்லா பயணிகளும் ஸ்கேனர்கள் வழியாக போகவேண்டிய அவசியம் இல்லை. சந்தேகத்துகுரிய நபர்கள் மட்டும் ஸ்கேனர் வழியாக செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள். பரிசோதனைக்கு ஆகும் நேரம் ஒரு நிமிடத்துக்கும் குறைவே!
இந்த ஸ்கேனர் பயணிகள் பிளாஸ்டிக் மற்றும் திரவ வெடிபொருட்கள், பிளாஸ்டிக் அல்லது உலோக கைதுப்பாக்கிகள், போதை பொருட்கள், செராமிக் மற்றும் மெட்டல் கத்திகள், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ரெக்கார்டிங் செய்யும் பொருட்களை கொண்டு செல்லுகிறார்களா என்பதை ஆராயும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.