டில்லி,
கருப்பு பணத்தை மாற்ற முயற்சி செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக ரூ.2 ஆயிரம், புதிய 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசு முடிவு செய்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே தற்போது கிடைக்கிறது.
புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இன்று வரை மக்கள் கூட்டம் வங்கிகளை மொய்த்துக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, பழைய நோட்டுகளை சட்டத்திற்கு விரோதமாக மாற்றும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. பெரும் பணக்காரர்கள் அவர்களிடம் வேலை செய்புவர்களின் கணக்கில் தமது பணத்தை டெபாசிட் செய்து வருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. அது கண்டுபிடிக்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில், கணக்கில் வராத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மற்றவரின் வங்கி கணக்கில் செலுத்துவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு செல்லாத ரூபாய் நோட்டுகளை பிறரது வங்கி கணக்கில் செலுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமானவரித்துறை கூறியுள்ளது.
பினாமி சொத்து மாற்ற சட்டப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ம் தேதிக்கு பிறகு வங்கி கணக்கில் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.