நெட்டிசன்:
“காலச்சுவடு” இதழின் ஆசிரியர் கண்ணன் (Kannan Sundaram) அவர்களின் முகநூல் பதிவு:
தமிழில் பாலுறவு பற்றி எழுதும் ஆண் எழுத்தாளர்கள் உள்ளனர். அல்லாதவர்களும் உள்ளனர். இவர்களை விமர்சகர்கள் வேறுபடுத்துவது இல்லை. ஒப்பிடுவது இல்லை. இவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள்தான். உடல் உறுப்புகளை, உடல் வேட்கைகளை பற்றி எழுதும் ஆண் எழுத்தாளர்கள் யார் என்று ஒரு கேள்வியை வாசகரிடம் எழுப்பினால் யோசித்துப் பதில் சொல்லவேண்டியிருக்கும். பெண் எழுத்தாளர்களைப் பற்றி தூக்கத்தில் எழுப்பினால்கூட பெயர்பட்டியல் வரும்.
ஆகவே நண்பர்களே இரண்டு வகைப் பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். உடல் வேட்கைகளை பற்றி எழுதுபவர்கள், எழுதாதவர்கள். உடல் உறுப்புகளை அதிர்ச்சி மதிப்பிற்காக பயன்படுத்துபவர்கள் மற்றும் அல்லாதவர்கள். இந்த அதிர்ச்சி மதிப்பு பற்றி இருபது ஆண்டுகளாக படித்துக்கொண்டிருக்கிறேன். சில கேள்விகள். பெண்கள் வேட்கைகளை பற்றி, உடலுறுப்புகளைப் எழுதினால் ஏன் அதிர்ச்சி உருவாக வேண்டும் ? எத்தகைய மதிப்பீடுகளிலிருந்து இந்த அதிர்ச்சி உருவாகிறது? அந்த மதிப்பீடுகளை அறியவேண்டாமா? கேள்விக்கு உட்படுத்தவேண்டாமா?
இன்னொரு கேள்வி ஏன் தமிழர்களுக்கு பெண்களின் வேட்கையைத்் தவிர எதுவுமே அதிர்ச்சி அளிப்பது இல்லை? அதிர்ச்சி மதிப்பிற்காக வன்முறையை பயன்படுத்துபவர்கள் உண்டா ? சாதி மதத்தை பயன்படுத்துபவர்கள் உண்டா ? உறவுகளை பயன்படுத்துபவர்கள் உண்டா? வரலாற்றைப் பயன்படுத்துபவர்கள் உண்டா?
‘பயன்படுத்தாத’ பெண் கவிஞர்கள் பற்றிய ஆண்களின் முன்னுரையை, மதிப்புரைகளை, பின் அட்டைக்குறிப்புகளை தொடர்ந்து 15 ஆண்டுகளாக கவனமாக படித்து வருகிறேன். இவற்றில் ‘ பயன்படுத்தும்’ பெண் எழுத்தாளர்களுடன் அவர்களை ஒப்பிடாத ஒரு மதிப்பீடுகூட வந்ததில்லை என்று சற்றே மிகைப்படுத்தி கூறிவிடலாம். இந்த மதிப்பீடுகள் சம்பந்தப்பட்ட பெண் எழுத்தாளர்களுக்கு அதிகமும் மகிழ்ச்சியைத் தருகின்றன. அவை ஒரு வகையில் அவர்களில் பலரின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடும்தான்.
சல்மாவின், மாலதி மைத்ரியின் ‘ அதிர்ச்சி ‘ கவிதைகள் வெளிவந்து இருபது ஆண்டுகள் ஆகப்போகின்றன. எப்போது இந்த இருமையை கடக்கப்போகிறோம்?