‘தூங்காவனம்’ படத்தை அடுத்து என்ன என்பதை அப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சீக்கட்டி ராஜ்ஜியம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் கமல்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் தயாராக இருக்கும் இந்தப்படத்தை ராஜீவ்குமார் இயக்குகிறார். கமலின் ராஜ்கமல் திரை நிறுவனமே தயாரிக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் பெரும்பகுதி படமாக்கப்பட உள்ளது.
ஜனவரியில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் நடைபெற இருக்கிறது. மொத்தமாக 50 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு இருக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’ போன்று நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப்படத்தின் திரைக்கதையை கமலே எழுதுகிறார்.
அமலா, ஷரினா வகாப் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கிறார்கள்.
இன்னொரு நாயகியும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான தேர்வு மும்முரமாக நடக்கிறது. அந்த (கொஞ்சம் வயது முதிர்ந்த) கதாபாத்திரத்துக்கு, ஸ்ரீதேவி பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் ராஜீவ் சொல்ல.. “அய்யோ.. அவரா..” என்று அலறியே விட்டாராம் கமல்.
கமல், ஸ்ரீதேவி இருவரும் ஜோடியாக நடித்து புகழ் பெற்ற படங்கள் பல உண்டு. ஆனாலும் கமல் அலற நியாயமான காரணம் இருக்கிறது.
சமீபத்தில் வெளியான விஜய்யின் “புலி” படத்தில் நடித்த ஸ்ரீதேவி, படப்பிடிப்பின் போது செய்த களேபாரங்கள் கொஞ்சமா, நஞ்சமா… படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒரு ரசிகர், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஸ்ரீதேவியன் மகளை தனது கேமரா போனால் படம் எடுக்க.. இதைப் பார்த்து ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார் ஸ்ரீதேவி. அந்த நபரை பிடித்து அவரது கேமரா போனில் இருந்த படத்தை அழித்த பிறகும் ஸ்ரீதேவி திருப்தி அடையவில்லை. அந்த உயர் ரக கேமரா போனை வாங்கிக்கொண்ட பிறகுதான் அமைதியானார். பிறகு தயாரிப்பாளர் அதை ஈடுகட்டினார்.
அதோடு படப்பிடிப்பின் போது, தன்னுடன் ஒரு பட்டாளத்தையே அழைத்து வந்து செலவு வைத்தார். தனக்கு தன்னுடைய பேவரைட் மேக் அப் மேன்தான் வேண்டும் என்று அடம் பிடித்து சாதித்தார். தெலுங்கு மற்றும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட புலிக்கு, டப்பிங் பேச தனியாக ஐம்பது லட்சம் கோரி வாங்கிக்கொண்டார். அதோடு, இன்னும் சம்பள பாக்கி என்று தயாரிப்பாளர்கள் மீது புகார் கொடுத்தார்.
இதை எல்லாமே அறிந்ததால்தான் ஸ்ரீதேவியை ஒதுக்கினாராம் கமல்!
ஹூம்.. சப்பாணி, மயிலு எல்லாம் அந்தக்காலம்!