1

சென்னை சூளை பகுதியில் உள்ள சென்னப்ப கேசவ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வசந்த குமார், முப்பத்தைந்து வயது இளைஞர்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை இருக்கிறார்கள். குழந்தைக்கு உடல் நலம் இல்லாததால் இரவு  நேரத்தில், மருத்துவமனைக்கு மனைவியுடன்  குழந்தையையும் தூக்கிக்கொண்டு  சென்றார்.

வேப்பேரி நெடுஞ்சாலை மேடக் தெரு சந்திப்பு அருகே செல்லும்போது திடுமென மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். அங்கு மழை காரணமாக ஒரு மரம் விழுந்திருக்கிறது. அதனால் மின்சார கம்பியும் அறுந்து விழுந்து தண்ணீரில் பட்டிருக்கிறது. இதனால் நீரில் கால் வைத்த வசந்தகுமார் மீது மின்சாரம் பாய்ந்திருக்கிறது.

தூக்கி எறியப்பட்ட வசந்தகமாரைக் கண்டு அவரது மனைவியும், குழந்தையும் கதறி துடித்தனர்.

விழுந்து கிடந்த மரத்தை சாலை ஓரத்தில் இழுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய வசந்த குமாரை சென்னை அரசு  பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே வசந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.

“மரம் விழுந்தவுடனேயே மின்சாரத்தை துண்டித்திருந்தால் இந்த மரணம் நடந்திருக்காது. இந்த விபத்துக்கு மாநகராட்சி ஊழியர்களின் அசிரத்தையே காரணம்” என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

“அதே போல, நாமும் எச்சிரிக்கையாக இருக்க வேண்டும். சபரிமலைக்கு மாலை போட்டிருந்ததால் வசந்தகுமார் செருப்பு அணியவில்லை. அப்படி அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். கால சூழலுக்கு ஏற்ப நமது பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள் வேறு சிலர்.

இளைஞர் பலியானதற்குக் காரணம் ஆள்பரவரா, ஆண்டவரா என்கிற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும்.. மறைந்த அந்த இளைஞனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பதில் சொல்லப்போவது யார்?