indus480full
டில்லி,
தொழில் நடத்த உகந்த இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 18வது இடத்திற்கு தள்ளப்பட்டது.  உலக வங்கியும் மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை ஆய்வில் இந்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது..
தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் பிடித்துள்ளன. 2015ல் முதலிடத்தில் இருந்த குஜராத் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 4வது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் மத்தியபிரதேசம், 6வது இடத்தில் அரியானா, 7வது இடத்தில் ஜார்க்கண்ட், 8வது இடத்தில் ராஜஸ்தான் , 9வது இடத்தில் உத்தரகாண்ட், 10வது இடத்தில் மராட்டியம் உள்ளது.
இதுபோல் கடந்த ஆண்டு 12வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு பின்னோக்கி சென்று 18வது இடத்தை பெற்றுள்ளது.
industry
இந்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் 340 அம்ச  தொழில் சீர்திருத்த திட்ட நடவடிக்கை களை, மாநிலங்கள் எவ்வாறு செயல்படுத்தி உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த, மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி உருவாக்கவே இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு உகந்த மாநிலத்தில் 20வது இடம்
விவசாயிகளுக்கு உகந்த மாநிலம் குறித்து நிடி ஆயோக் தயாரித்த பட்டியலில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது.
தமிழகம் 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது .
விவசாய துறையில் மாநில அரசு செய்த சீர்திருத்தங்கள் அடிப்படையில், “விவசாயத்துறையில் வணிகம் மற்றும் விவசாயிகளுக்கு உகந்த சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் நிடி ஆயோக் முதன் முறையாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
இதில், மகாராஷ்டிரா மாநிலம் 81.7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
விவசாய துறையில் பல சீர்திருத்தங்களை அம்மாநில அரசு செய்துள்ளது. இதனால், இங்கு, யாரும் எளிதாக விவசாய துறையில் முதலீடு செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
indust2
குஜராத் மாநில அரசு 71.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்த இடங்களில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் உள்ளது.
ஆனால். தோட்டக்கலை மற்றும் தாவர வளர்ப்பில், இந்திய அளவில் முக்கிய இடத்தில் உள்ள தமிழகம், இந்த பட்டியலில் 20வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் விவசாய துறையில் போதிய முதலீடு கிடைப்பதும், நவீனமாயமாக்கலும் அரிதாகவே உள்ளன. தமிழகத்தில் விவசாயம் மற்றும் உணவுத்துறை, போதிய சீர்திருத்தங்கள் மற்றும் திறம்பட செயல்பட தவறியதே இதற்கு காரணம்.
விவசாயிகள் லாபம் பெறும் வகையில், சிறந்த வணிக வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்தால், அதிக உற்பத்தி செய்வதுடன், லாபம் பெறுவதற்கான சூழலும் உருவாகும்.
தமிழகம் 100க்கு 17.7 புள்ளிகளே பெற்றுள்ளது. தமிழகத்தற்கு அடுத்த இடங்களில் மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவுகள் உள்ளன.
இந்த பட்டியலில் மகாராஷ்டிரா 81.7 புள்ளிகளையும், குஜராத் 71.5 புள்ளிகளையும், ராஜஸ்தான் 70 புள்ளிகளையும் உத்தர பிரதேசம் 47.8 புள்ளிகளையும், தமிழகம் 17.7 புள்ளிகளையும் பெற்றுள்ளது.