12278180_10153787916844048_1083873368_n

சென்னை:  

ற்போதைய மழை வெள்ள பாதிப்பை சரிப்படுத்தவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசு முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற புகார் பரவலாக எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் மீது, குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

சம்பத்
சம்பத்

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் போல் செயல்படுவது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரம், ஆளுங்கட்சியை சேர்ந்த நடிகை சரஸ்வதி, “வருணபகவான் போன் போட்டு சொல்லிவிட்டா வருவார்” என்று தொலைக்காட்சி விவாதத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்தைவிட இன்னும் ஒரு படி அதிகமாக முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து போர்டே வைத்திருக்கிறார் கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்.

 

அர்ச்சனா பட்நாயக்
அர்ச்சனா பட்நாயக்

கோவை கவுண்டம்பாளையம் சிக்னல் அருகில் இவர் ஒரு தட்டி வைத்திருக்கிறார். அதில், “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையில் நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி என்றும் அம்மாவின் ஆட்சி” என்று பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியின் சாதனைகள் என்று பல விசயங்கள் குறிப்பிடப்பட்டு கீழே, “மாவட்ட ஆட்சித்தலைவர், கோயம்புத்தூர் மாவட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அரசுத் துறையில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்களே அரசியல் சார்ந்து இயங்கக்கூடாது என்பது விதி. ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அர்ச்சனா பட்நாயக், தேர்தல் விளம்பரம் போல “அம்மா, புரட்சித்தலைவி” என்று விளித்திருப்பதோடு, ”என்றும் அம்மாவின் ஆட்சி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த போர்டு, மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் வெளிப்படையாக வைத்திருக்கிறார்.    இது மக்களை கூடுதலான அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கிறது.

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது  பதில் அளிக்க மறுத்துவிட்டார்.  கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கின் அலைபேசி எடுக்கவில்லை. ஆகவே அவரது அலுவலக எண்ணை தொடர்புகொண்டோம்.   “பொள்ளாச்சி அருகே கிராமம் ஒன்றில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார்” என்று பதில் வந்தது.

மாவட்ட ஆட்சியர் இருவருக்கும், அவர்களது மெயில் ஐடியில் நமது கேள்விகளை அனுப்பியுள்ளோம்.

– சுந்தரம், ஜி. துரை மோகனராஜூ