நெட்டிசன்:
பிரபல கவிஞரும் தி.மு.க. பேச்சாளருமான மனுஷ்யபுத்திரனை நேற்று இரவு கடும் நெஞ்சுவலி தாக்கியது. சிகிச்சைப்பிறகு இப்போது இயல்புநிலைக்கு திரும்பியிருக்கும் அவர், அந்த “நெஞ்சு வலி கணம்” பற்றி தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.
அந்த பதிவு:
“இறந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். நேற்று இரவு 1 மணிக்கு நெஞ்சைப் பிளப்பதுபோன்ற வலி. அப்போதுதான் எழுதி முடித்து தூங்கப் போயிருந்தேன். மூச்சுவிட முடியவில்லை.துடித்துப்போனேன். அரைமணி நேர போராட்டத்ததிற்கு பிறகு வலி தணிந்தது. களைத்து தூங்கிப்போனேன். அடுத்த தாக்குதல் அதிகாலை மூன்று மணிக்கு. இன்னும் கடுமையாக இருந்தது. உடல் ஒரு கணம் அறுபட்ட ஒரு பறவைபோல மாறிவிட்டது. எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.
செல்வி, பதட்டத்துடன் ஒரு ஓலா எடுத்து இஸபெல்லிற்கு அழைத்துச் சென்றாள். அவசர உதவிப் பிரிவில் ஈ.சி.ஜி, இன்னபிற சோதனைகள் செய்யப்பட்டன. பெரிய பிரச்சினை இல்லை, கடும் வாயுத்தாக்குதலாக இருக்கலாம் என்றார் டாகடர். ஊசி போடப்பட்டது. மருந்துகள் எழுதினார்கள். பொழுதுவிடிய வீடு வந்து வந்து சேர்ந்தேன்.
இன்னும் பிரச்சினை முழுமையாக சரியாகவில்லை. படுத்துக்கொண்டே இருக்கிறேன். குழந்தைகளை பட்டாசும் புத்தாடைகளும் வாங்க அழைத்துச் செல்வதாக கூறியிருந்தேன். பப்பி நான் படுத்துக்கொண்டே இருப்பதை பார்த்து அமைதியிழந்து குரைக்கிறது.
இதுதான் கடைசிகணமா என்று நினைக்கும் கணம்தான் எத்தனை அதிசயமானது..எவ்வளவு வினோத எண்ணங்கள் மனதில் ததும்பி விடுகின்றன
எனக்கு ஒன்றும் ஆகாது, இன்னும் கொஞ்சம் வேலைகளும் கவிதைகளும் காதல்களும் பாக்கியிருக்கின்றன. காற்றே..முழுமையாக என் நெஞ்சில் நிரம்பு…என்னால் ரொம்ப நேரம் படுத்திருக்க முடியாது.
இந்த வாழ்க்கை என்பதே பிரமாண்டமான வெதுவெதுப்பான கரமாக இருக்கிறது. பற்றிக்கொள்ள என் இரண்டு கைகளும் போதாது.”