அமெரிக்காவில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த பெண் குழந்தை 23-வது வாரத்தில் வெளியே எடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மறுபடியும் தாயின் வயிற்றினுள் வைக்கப்பட்டு பின்னர் 12 வாரம் கழித்து வெற்றிகரமாக இரண்டாவது முறையாக பெற்றெடுக்கப்பட்டது.
தன் உயிரை காப்பாற்றிய மருத்துவருடன் லின்னி
மார்கரேட் போயிமர் என்ற அமெரிக்க பெண்ணுக்கு வயிற்றிலிருக்கும் பெண் குழந்தைக்கு பின்புறம் ஒரு கட்டி வளர்வதாக கர்ப்பமான 16-வது வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு இது போல கட்டி வளர்வது அபூர்வமாகும். இக்கட்டியும் குழந்தையுடன் போட்டி போட்டுக்கொண்டு வளரவே, இது குழந்தையின் இதயதுடிப்பை பாதித்து உயிருக்கே உலைவைக்கக் கூடும் என்ற எண்ணத்தில் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி 23-வது வாரம் 5வது நாளில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. குழந்தையைவிட கட்டி பெரிதாக வளர்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெறும் 20 நிமிடங்களில் நடந்து முடிந்திருக்க வேண்டிய அந்த அறுவை சிகிச்சை 5 மணி நேரங்களுக்கு மேல் நடந்தது. கட்டி மிகப் பெரிதாக இருந்ததால் பல மணிநேரங்கள் கர்ப்பபையை திறந்து குழந்தையை வெளியே எடுக்கவே செலவிடப்பட்டது.
கட்டி வெளியே எடுக்கப்பட்டபின்னர் குழந்தை மறுபடியும் தாயின் வயிற்றுக்குள் வைக்கப்பட்டு கர்ப்பபையின் வாய் தைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து அடுத்த 12 வாரங்களுக்குப் பின் இவ்வாண்டு ஜூன் மாதம் முற்றிலும் ஆரோக்கியமாக நிலையில் குழந்தை சிசெரியன் முறைப்படி தாயின் வயிற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. குழந்தைக்கு லின்னி என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.