மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் சசிகலா தடுப்பதாக, ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, “ நக்கீரன்” இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

deepa_cm_niece

“என் அத்தை ஜெயலலிதாவை  அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென சேர்த்திருப்பதாக மீடியாவில் செய்தியைப் பார்த்ததுமே எனக்கு அதிர்ச்சி. பதைபதைப்புடன்,  23-ம் தேதி காலையிலேயே அப்பல்லோவுக்கு ஓடினேன். கிரீம்ஸ் சாலையிலிருந்தே போலீஸாரின் கெடுபிடிகள் துவங்கியிருந்தன. மருத்துவமனை வாசலை இழுத்து மூடிவிட்டனர். மாலை வரை காத்திருந்துவிட்டு அழுதபடியே திரும்பினேன். அடுத்தடுத்த நாளும் இதே நிலைதான். 28-ம்  தேதி மாலை மருத்துவமனையின் வரவேற்பு அறை வரை செல்ல எனக்கு அனுமதி கிடைத்தது. அங்கிருந்த போலீஸ் அதிகாரி களிடம், “முதலமைச்சரின் அண்ணன் மகள், தீபா. எனது அத்தையை நான் பார்க்கணும்’ என்றேன்.  அவர்கள், உயரதிகாரிகள் சிலரிடம் பேச, அவர்களும் யாரிடமோ பேசினார்கள். ஆனால் எனக்கு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. விடிய விடிய காத்திருந்துவிட்டு, சோகத்துடன் திரும்பினேன்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினேன். அவர்களும் யாரிடமோ பேசிவிட்டு, அனுமதி மறுத்துவிட்டார்கள். அதிகாரிகளும் அப்பல்லோ நிர்வாகமும் என் அத்தையை சூழ்ந்திருக்கும் சசிகலா தரப்பினரிடம்தான் அனுமதி கேட்கிறார்கள்னு புரிந்துகொள்ள முடிந்தது.  அவர்களால்தான் தடுக்கப் படுகிறேன். என்னைத் தடுக்க இவர்கள் யார்?” என்று தீபா தெரிவித்திருக்கிறார்.

jaya_deepa

குடும்ப உறவுகளுக்கு அப்பால், உங்கள் அத்தைக்கும் உங்களுக்குமான உறவுகள் எப்படி?” என்ற கேள்விக்கு, “என்னுடைய அப்பா ஜெயக்குமார் மீது -அதாவது தன்னுடைய அண்ணன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர் என் அத்தை. நான் பிறந்ததே கார்டனில் தான். எனக்குப் பெயர் வைத்ததும் அத்தைதான் என்று அப்பாவும் அம்மாவும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.  எனக்கு விபரம் தெரிந்த வயதில் அத்தையே என்னிடம், “உனக்குப் பெயர் வைத்தது நான்தாண்டா’ என சொன்னபோது ஏற்பட்ட உணர்வுகள் அத்தனை நெகிழ்ச்சியானது
நாங்கள் ராயப்பேட்டை வீட்டுக்கு வந்த பிறகும், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எங்களை கார்டனுக்கு அழைத்து, பேசி சிரித்து மகிழ்ந்திருப்பார் அத்தை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டுமென அடிக்கடி என் அப்பாவுக்கு அறிவுறுத்துவார். ஒரு தாய், தன் குழந்தைக்கு எதையெல்லாம் சொல்லி வளர்ப்பாரோ அதுபோல என்னிடம் “நேர்மையாக இரு; மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்; உண்மையைச் சொல்வதில் தயங்காதே; ஜெயிப்பதற்காக கடுமையாக உழை; தைரியத்தை வளர்த்துக்கொள்; பிடிக்காத விசயங்களில் சமரசம் செய்துகொள்ளாதே’ என்றெல்லாம் நிறைய அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறார்.  அந்த வகையில், எனக்கு அவர் அத்தை அல்ல; அம்மா!
இந்த நிலையில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த சுதாகரன் திருமணம் 1995-செப்டம்பரில்  நடந்தது. அக்டோபரில்  என் அப்பா இறந்து போனார். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொன்ன அத்தை, “அடுத்த வாரம் வீட்டுக்கு வா’ என்று சொல்லிச் சென்றார்.
ஆனால் அதன் பிறகு எப்போதும் போல எங்களால் கார்டனுக்குள் போகமுடியவில்லை. பல மாற்றங்கள் நடந்திருப்பது புரிந்தது. வாரத்திற்கு இரண்டு மூன்றுமுறை எங்கள் வீட்டுக்குப் ஃபோன் செய்து  பேசியவர் அத்தை. அவரே டயல் செய்துதான் பேசுவார்.  அப்படிப்பட்டவரிடமிருந்து ஃபோன் வருவது நின்று போனது. நான் ஃபோன் செய்தாலும் யாரோ எடுத்து, கட் செய்தார்கள். ஃபேக்ஸ் வழியாக பல கடிதங்கள் எழுதியிருக்கேன். அதெல்லாம் அத்தை கைக்கு சென்றதா என்பதே  சந்தேகம்தான்.
1996-ல் அத்தை கைது செய்யப்பட்டு சென்னை சென்ட்ரல் ஜெயிலில் இருந்தபோது அவரைப் போய்ப்பார்த்து கதறினேன். அவர்தான் தைரியமாக  எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்.  2001-ல் மீண்டும் முதல்வரானார். 2002-ல் அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அதுதான் அத்தையை சந்தித்த கடைசி நாள். 6 மணிநேரம் என்னோடு இருந்தாங்க. நான் அனுப்பிய ஃபேக்ஸ், கடிதங்கள் எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. கார்டனுக்கு நான் வந்ததும், உள்ளேவிடாமல் தடுக் கப்பட்டதும் கூட தெரியவில்லை. உடனே, மேனேஜர் பொறுப்பில் இருந்தவரை அழைத்து, “என்னோட அண்ணன் பொண்ணு இவர். எனக்கு மகள் மாதிரி’ன்னு சொன்னாங்க. ஆனாலும் கார்டனில் பழைய நிலைமைதான் நீடித்தது.  காரணம் அத்தையை சுற்றி இருக்கும் சசிகலா குடும்பம்தான்னு நினைக்கிறேன்” என்று தீபா தெரிவித்திருக்கிறார்.
“சசிகலா தரப்பினர் ஏன் உங்களைத் தடுக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு, “என்னை மகளாக சுவீகாரம் செய்துகொள்ள அத்தை விரும்பியிருக்கிறார் என்பது எங்களுக்குப் பின்னாளில் தெரிந்தது. இந்த விசயம் சசிகலா குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதனால் எங்களைப்பற்றி நெகடிவ்வாக அத்தையிடம் சொல்லி அவரது  மனதை கலைத்திருக்கிறார்கள் என்பதே எங்களுடைய சந்தேகம். 2002 – காலகட்டத்தில்  ஒருமுறை என்னிடம் பேசிய சசிகலா, “உங்க அத்தைக்கு உன்னைப் பிடிக்கவில்லை. அதனால் இனி கார்டன் பக்கம் வரக்கூடாது. கார்டனுக்கு வரக்கூடாதுன்னு சொல்லச் சொன்னாங்க’ எனச் சொன்னார். “அத்தைகிட்டே ஃபோனை கொடுங்க. என்கிட்டே அவங்க சொல்லட்டும். எங்களுக்கு இடையில நீங்க யாரு’ன்னு கேட் டேன். இப்பவும் நான் கேட்கிறேன், எங்க அத்தைக்கு அவர்கள் யார்? எங்களிடமிருந்து அத்தையை பிரித்ததன் நோக்கம் என்ன?” என்று தீபா தெரிவித்திருக்கிறார்.
“ரத்த சொந்தம் என்கிற முறையில் நீதிமன்றத்தை அணுகி ஜெயலலிதா வைப் பார்க்க அனுமதி பெறலாமே?” என்ற கேள்விக்கு, “சொந்த அத்தையை பார்ப்பதற்கு கூட எனக்கு உரிமை இல்லையா? அதற்காக கோர்ட்டுக்குப் போகணுமா? அந்தளவுக்கு எல்லோரும் மனசாட்சியை அடகு வைத்துவிட்டார்களா? ரொம்ப கொடுமை இது. மருத்துவ சிகிச்சையில் இருக்கும் என் அத்தைக்கு என்னுடைய  நடவடிக்கைகள் மேலும் மன உளைச்சலையோ வருத்தத்தையோ தந்துவிடக் கூடாதுங்கிறதினாலத்தான் அந்த முயற்சியை நான் எடுக்கவில்லை” என்று தீபா கூறியிருக்கிறார்.
(நன்றி: நக்கீரன் இதழ்)