thamizharasan1

தனித்தமிழ்நாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்திய தமிழரசனின் நினைவு நாளான இன்று, அவருக்கு அஞ்சலி செலுத்த காவல்துறையின் தடையை மீறி குழுமிய தமிழ்தேச மக்கள் கட்சியினர் விருத்தாசலத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து, “மீண்டும் எழுகிறதா தனித்தமிழ்நாடு முழக்கம்” என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

யார் இந்த தமிழரசன்?

thamizharasan2

 

தமிழரசனின் ஆதரவாளர்கள், “எண்பதுகளில் புரட்சியாளர்களின் நாயகனாக பேசப்பட்டவர் தமிழரசன். மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர். கோவை பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தீவிர இடதுசாரி தலைவர் சாருமஜூம்தார் அழைப்பினை ஏற்று, கல்லூரிப்படிப்பை துறந்து, பொதுப் பிரச்சினைகளுக்காக போராட வந்தவர்.
“சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் களைய பொதுவுடமை தேசமாக தனித் தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் தீர்வு” என்ற எண்ணம் கொண்டவராக விளங்கினார்.

ஆரம்பத்தில் சாருமஜூம்தார் என்ற இடதுசாரி தலைவரின் அமைப்பில் இருந்தாலும், பிறகு புலவர் கலியபெருமாளுடன் இணைந்து செயல்பட்டார். அடுத்து, இவரது தலைமையில் தனியாக, “தமிழ்நாடு விடுதலைப்படை” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்த இவர். கடலூர் பெரம்பலூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் நிலவிய சாதி வெறி, பண்ணை அடிமை முறைகளை நீக்க மக்களை திரட்டி போராடினார்.
தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் அவரது இயக்கத்துக்கு பணம் தேவைப்பட்டது. ஆகவே, தான் படித்த பொன்பரப்பி என்ற சிற்றூரில் உள்ள வங்கியில் கொள்ளையிட முடிவு செய்தார்.

அவர் உள்ளிட்ட ஐந்து பேர் கொள்ளையடிக்க வங்கிக்குள் புகுந்தனர்.
ஏற்கெனவே இந்த செய்தியை அறிந்திருந்த காவல் துறை, சாதாரண உடையில் மக்களுடன் சேர்ந்து, தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்களை அடித்தே கொன்றது.

தன் கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையிலும், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதை பயன்படுத்தி தப்பிக்க முயலவில்லை” என்கிறார்கள் தமிழரசன் ஆதரவாளர்கள்.

காவல் துறையினரோ, “தமிழரசனை பொதுமக்கள்தான் அடித்துக்கொன்றார்கள்” என்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்தது 1986ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி.

அதன் பிறகு, தனித்தமிழ்நாடு கோரி சிறு குழுக்கள் நடத்திவந்த ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னாளில் வீரப்பன் தலைமையில் மாறன், புதுக்கோட்டை முத்துக்குமார் உட்பட சிலர் “தனித்தமிழ்நாடு” முழக்கத்துடன் வெளியே தெரிய ஆரம்பித்தார்கள். வீரப்பன் மறைவுக்குப் பிறகு தனித்தமிழ்நாடு என்று பேசுகிற ஆயுதக்குழுக்கள் இல்லாமல் போனது.

இந்த நிலையில்தான், வழக்கறிஞர் புகழேந்தி தலைமையிலான தமிழ்தேச மக்கள் கட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று, கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் “தமிழ்தேசிய ஈகியர் நினைவு மாநாடு” நடத்தப்போவதாக அறிவித்தது. (பெண்ணாடத்தை மையமாக வைத்துத்தான் தமிழரசன் இயங்கினார்.)

இந்த நினைவேந்தல் மற்றும் மாநாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது. காவல் துறை தரப்பில், “தமிழாய் எழுவோம்! தமிழ்த்தேசம் படைப்போம்” என்ற முழக்கங்களுடன் மாநாடு விளம்பரப்படுத்தப்படுகிறது “தமிழ்த்தேச ஈகியர் நினைவு மாநாடு” என்ற சுவர் எழுத்துக்கள் பெண்ணாடம், விருத்தாசலம் பகுதிகளில் காணப்பட்டுகின்றன.

 

thamizharasan3
மேலும், “இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபாய்.
அதில் இருந்து தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபாய் மட்டுமே. . அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபாயாக குறைக்கப்படவிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மத்திய அரசுக்கு 57000கோடி ரூபாய் வழங்கி வருகிறது.
இது அடிமை நாடு கப்பம் கட்டுவது போலத்தான் இருக்கறது. ஏனென்றால், தமிழகத்தின் நீராதார உரிமை, தமிழர்களின் மீன் பிடிக்கும் உரிமை உட்பட பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அதற்கு மத்திய அரசும் உடந்தையாக இருக்கிறது” என்று பொருள்படும்படி, தமிழ் தேசியவாதிகள் பலர் சமூகவலைதளங்களில் கருத்திட்டார்கள்.

தவிர, தமிழரசன் துவக்கிய “தமிழ்நாடு விடுதலைப்படை” என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. தமிழரசனுக்கு அஞ்சலி செலுத்தி மாநாடு நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ஆகவேதான் தமிழரசனுக்கு நினைவஞ்சலி செலுத்துவதையும், மாநாட்டையும் தடை செய்தோம்” என்று சொல்கிறது காவல்துறை தரப்பு.

காவல்துறையின் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்தேசமக்கள் கட்சி தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் இன்று தமிழ்தேச மக்கள் கட்சியினர் விருத்தாசலம் பாலக்கரை பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட திட்டமிட்டு திரண்டனர். அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.

thamizharasan4

 

 

தமிழ்தேச மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தியுடன் பேசினோம்:

 

 

thamizharasan5

“தனித்தமிழ்நாடு கேட்டு போராடிய தமிழரசனின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தவும், மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தீர்கள். மீண்டும் தனித்தமிழ்நாடு சித்தாந்தத்தை தட்டி எழுப்பும் முயற்சியா இது?”

”தனித்தமிழ்நாடு என்கிற கருத்துருவை விடுங்கள். இந்திய அரசு தமிழர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்கிறது. அணுவுலை, மீனவ பிரச்சனை, ஆற்று நீர் பிரச்சினை, மீத்தேன் போன்ற திட்டங்கள்.. இப்படி தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பறிக்கிறது. எங்கள் மொழியும் இனமும் எங்கள் மண்ணிலேயே அழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

எங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதற்கானசரியான தலைவராக நாங்கள் தமிழரசனை பார்க்கிறோம்.

மற்றபடி தனித்தமிழ்நாடு அல்லது தன்னுரிமை பிரதேசம் என்கிற கருத்துருவை நோக்கி இப்போ நாங்க போகலை. எல்லா அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்றன. ஆகவே தமிழ் மக்களக்கான ஒரு கட்சியை நாங்கள் அமைத்திருக்கிறோம்!”

“தமிழ்த்தேசியம் என்ற கருத்தோடு பல கட்சிகள், அமைப்புகள் ஏற்கெனவே இருக்கின்றனவே!”

“நாங்க எந்த அமைப்பும் சரியான நோக்கத்தோடு இல்லை. ஆகவே எந்த ஒரு அமைப்பையும் நாங்கள் ஏற்கவில்லை.”

“தமிழரசன் ஆயுதப்போராட்டம் நடத்தியவர். உங்கள் போராட்ட வடிவம் எப்படி இருக்கும்?”

“நாங்ள் முழுக்க முழுக்க மக்களைத் திரட்டி, அவர்களது உரிமைகளுக்காக போராடுவோம். அதாவது ஜனநாய வழிமுறைகளிலேயே போராடுவோம். எங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வூட்டுவோம்!”

“உங்கள் நோக்கத்தை மக்களிடம் பரப்பி, அவர்களை ஈர்க்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?”

“நிச்சயமாக இருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் நாங்கள் நினைத்ததை சாதிப்போம்!”