டெல்லி:
தமிழக முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோரை கைது செய்வது குறித்து டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம் தமிழக அரசுக்கு கைது குறித்து கேள்வி எழுப்பியதோடு, மனுவையும் டிஸ்மிஸ் செய்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியோரை கைது செய்வது சரியா? என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதோடு, வதந்தி பிரச்சினையை நீங்கள் இப்படித்தான் சமாளிப்பீர்களா எனவும் வினவியுள்ளது. மேலும் மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22ந் தேதி நள்ளிரவு உடல்நலம் சரியில்லாமல் சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் டாக்டர், சிங்கப்பூர் டாக்டர்கள், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட சென்னை அப்பல்லோ மருத்துவ குழுவினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் உடல்நலம் குறித்து, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,வதந்தி பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செய்யப்படும் என போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதையும் மீறி வதந்தி பரப்பிய 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அரசின் இந்த கைது செயலுக்கு, சமூக ஊடக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சிகள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு போன்ற சட்ட வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கைகளை கைவிடவும், கைதானவர்களை விடுதலை செய்யவும், சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனு இன்று நீதிபதி, தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வதந்தி பரப்பியோரை கைது செய்தது சரிதானா.. நிலைமையை இப்படித்தான் கட்டுப்படுத்துவீர்களா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன் டிராபிக் ராமசாமியின் மனுவை டிஸ்மிஸ் செய்தும் உத்தரவிட்டது.