டில்லி,
த்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யும்படி குடியரசு தலைவரிடம் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள்  சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
டெல்லி சென்ற மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மதியம் 1.30 மணிக்கு சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில்,  மறுமலர்ச்சி தி,மு,க பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்  ஜி. இராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் டி.கே. ரெங்கராஜன் (சிபிஎம்) டி, இராஜா (சிபிஐ)  ஆகியோர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, காவிரி நதிநீர்ப் பிரச்சினை குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.
makkal_pranab
அப்போது குடியரசுத் தலைவரிடம் வைகோ கூறியதாவது:
“காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1924 ல் ஏற்பட்டது. எழுபதுகளில் கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சித்தது. இரண்டு மாநில அரசுகளும் இருபதுக்கும் மேற்பட்ட பேசியும், தமிழ்நாட்டுக்கு உரிய நியாயம் கிடைக்காததால், பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 1990 ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரி 5ந் தேதி வழங்கப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், 2013 பிப்ரவரி 20ந் தேதி தான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டது.
அதன்படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அமைக்கவில்லை.
காவிரி நதி நீரை நம்பி இருக்கின்ற தமிழகத்தில் 20 இலட்சம் ஏக்கர் பாசனத்தை, கர்நாடகத்தின் அடாவடிப் போக்கால் இழந்தோம்.
இந்த ஆண்டு மட்டும் இதனால் 8000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டது என்று வைகோ கூறியபோது,
குடியரசுத் தலைவர் இடை மறித்து,  ‘கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விட்டதா?’ என்று கேட்டார்.
பலமுறை உச்சநீதிமன்றம் கூறியபோதும் ‘திறக்க முடியாது’ கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா கூறிவிட்டார் என்று வைகோ கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தபோது முதலில் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அதன் பின்பு முடியாது என்று உச்சநீதிமன்றத்திலேயே மறுத்து விட்டது. இது மிகப்பெரிய அநீதி ஆகும்.
ஆசியாவின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சைத் தரணி, பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டிய நிலைமைக்கு ஆளாகிக் கொண்டு இருக்கின்றது.
ஹெல்சிங்கி விதிகளின்படி, கடைமடைப் பாசனப் பகுதிக்குச் சட்டப்படியான உரிமைகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டுக்கு மற்றொரு ஆபத்தாக, காவிரிக்குக் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில்  கர்நாடக அரசு இரண்டு புதிய அணைகளைக் கட்ட இருக்கின்றது.
இதனை மத்திய அரசு மறைமுகமாக ஊக்குவிக்கின்றது. அதனால் நிதி ஒதுக்கீடு செய்து அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு இருக்கின்றது.
அப்படிப் புதிய அணைகள் கட்டினால், எதிர்காலத்தில் சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழகத்துக்கு வராது. தமிழ்நாடு பாலைவனம் ஆகும்.
மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கைவிட்ட அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற இன்றைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஒரு மாநிலத்தில் உள்ள அணைக்கட்டுகள் நீர்த்தேக்கங்கள் குறித்து முடிவு எடுக்கின்ற முழு அதிகாரமும் அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கப்படும்.
இதனால் தமிழகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்; அதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து நேரும் என்பதைக் கவலையோடு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்
என்று வைகோ குறிப்பிட்டார்.
‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அரசியல் சட்ட அடிப்படையில் ஏதேனும் தடங்கல் இருக்கின்றதா?’ என்று டி.கே. ரெங்கராஜன் அவர்கள் கேட்டபோது,
‘அப்படி இல்லை’ என்கின்ற விதத்தில் குடியரசுத் தலைவர் தலை அசைத்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் குடியரசுத் தலைவர் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று, ஜி. இராமகிருஷ்ணன், டி.இராஜா, முத்தரசன், தொல். திருமா வளவன், ரவிக்குமார் ஆகியோரும் வலியுறுத்தியதை, குடியரசுத் தலைவர் அனுதாபத்தோடு கேட்டார்.
‘இப்பிரச்சினை குறித்த கோப்புகளை வரவழைத்துக் கவனிக்கிறேன்’ என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
இந்தச் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், ‘குடியரசுத் தலைவருடனான சந்திப்பு மனநிறைவு அளித்தது’ என்று கூறினர்.