1 (2)

மிழகத்தின் இருபது மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘

தென் மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறுகிறது. ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை, கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாகத்தான் மாநிலம் முழுவதும் பெருமழை பெய்து வருகிறது.

அதிகபட்சம் 18 செ.மீ.

பல மாவட்டங்களில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், “தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை பகுதியில், தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. அதனால், வட கடலோர மாவட்டங்களில், அனேக இடங்கள்; பிற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மழை பெய்திருக்கிறது. .

அதிகபட்சமாக, நாகை மாவட்டம், ஆணைக்காரன் சத்திரம் பகுதியில், 18 செ.மீ., சீர்காழியில், 17 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது. .மேலும் தொடர்ந்து மழை பெய்யும்.

மழை நீடிக்கும்

கடல் கொந்தளிப்பாக இருக்கும். ஆகவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்படுகின்றனர். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்; சில நேரங்களில், கனமழை பெய்யும்.

இலங்கை அருகே நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் நோக்கி நகர்ந்து,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. ஆகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும்; அதை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு லேசான மழை இருக்கும்” என்று ரமணன் கூறினார்.

விடுமுறை:

கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார்,திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, திருச்சி, நாமக்கல், வேலுார், திருவாரூர், ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி என, 14 மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கும்; தர்மபுரி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சை, நீலகிரி என, ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா. அம்பேத்கர் சட்டப் பல்கலைகளில், இன்று முதல் நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.வேலுார், திருவள்ளுவர் பல்கலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு குழுவினர்

தமிழகத்தில் , நிலைமையை சமாளிக்க, ஆந்திராவில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை குழுவின், 10 பட்டாலியனைச் சேர்ந்த, 140 வீரர்கள், நான்கு குழுக்களாக தமிழகம் வந்தனர். சென்னை, விழுப்புரத்திற்கு, தலா, ஒரு குழுவினரும்; மற்ற, இரண்டு குழுவினர் அரக்கோணம் பட்டாலியனுக்கும் அனுப்பப்பட்டனர். மழை பாதிப்புள்ள பகுதிகளில் இவர்கள் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இழப்பு:

தொடர் கனமழையால், 1,480 மின் கம்பங்கள்; 75 மின்சுற்று கி.மீ., அளவில், மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் மொத்தம், 16 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்தடை

தமிழகம் முழுதும் பெரும்பாலான இடங்களில் மின்தடை நீடிக்கிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் தற்போது வரை மின்சாரம் இல்லை.

65 பேர் பலி

தமிழகத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை, 65 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா, தலா, நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.