யாழ்ப்பாணம்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண் டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நேற்று நடந்த முழு வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது தேர்தல் பிரச்சாரத்தில் “சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இன்றுவரை அதை நிறைவேற்றவில்லை.
இதையடுத்து தமது விடுதலை தொடர்பாக வழங்கிய வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர்.
இந்நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவளித்து இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இந்த அழைப்பு விடுத்தன. அத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவளித்தன.
மேலும், வடக்கு மாகாண சபை, சர்வமத தலைவர்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள், கல்விச் சமுகம், பல்கலைக்கழக சமுகம், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், இந்து, கத்தோலிக்க அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழு அடைப்புக்கு ஒத்துழைப்பு அளித்தன.
இதையடுத்து நேற்று வடக்கு, கிழக்கு பகுதியில் முழு கடை அடைப்பு அமைதியாக வெற்றிகரமாக நடந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்தும் பெரும்பாலும் இல்லை.
இதையடுத்து தமிழர் அமைப்புகள், “உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதையேம க்கள் விரும்புகிறார்கள். மக்களின் உணர்வை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறி உள்ளன.