கூடங்குளம்,
கூடங்குளத்தில் நேற்று மாலை இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
இன்று மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகள் தொடக்க விழா நடைபெறுகிறது.
ரஷ்ய அதிபர் புதினும், இந்திய பிரதமர் மோடியும் காணோளி காட்சி மூலம் அதற்கான பணிகளை தொடங்கி வைக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு நிதி உதவியுடன் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
முதல் அணு உலையில் 2014-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டு 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பிற்கு அனுப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2-வது அணு உலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கி சோதனை அடிப்படையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்தது. அதிகபட்சமாக 300 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கப்பட்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பபட்டது.
முதலில் மின்சாரம் தயாரிக்கும் போது அடிக்கடி ஆய்வுக்காக மின் உற்பத்தி நிறுத்தம் செய்து மீண்டும் உற்பத்தி செய்வது வழக்கம். அதன்படி 2-வது அணுஉலையில் மின்சாரம் தயாரிப்பது கடந்த மாதம் 6-ம் தேதி நிறுத்தப்பட்டது. \
ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.
இன்று 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான பணிகள் தொடங்கப்படுவதை யொட்டி, இரண்டாவது அணு உலையில் நேற்று மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கியது.
நேற்று மாலை 6.14-க்கு மின் உற்பத்தி தொடங்கியபோது 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது படிப்படியாக உயர்த்தப்பட்டு முழு அளவான 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.