சென்னை:
தமிழக்ததில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சாத்தூர் அருகே, ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“சாத்தூரில் ஓடும் பேருந்தில் கருப்பசாமி என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி தமிழக மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓடும் ரயிலில் கோடிக்கணக்கான வங்கி பணம் திருட்டு போன்ற பல அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே நடந்து முடிந்து பல நாட்களாகியும் இந்த சம்பவங்கள் எப்படி நடந்தது? யாரால் நடந்தது? என்பதை கூட கண்டறியமுடியாமல் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத துப்பாக்கி சூடு கலாச்சாரம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. நாம் தமிழ்நாட்டில் தான் உள்ளோமா அல்லது வெளிநாட்டில் உள்ளோமா என்ற சந்தேகம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
முன் விரோதம் காரணமாக சாத்தூரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம், துப்பாக்கி ஏந்தியவனுக்கு துப்பாக்கியால் தான் மரணம் என்பது பழமொழி.
எனவே பகையை வளர்க்காமல் நட்பு உணர்வோடு வாழ வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.