அம்பாலா:
அரியானாவில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அம்பாலாவில் முதன்முறையாக கைதிகளுக்கான திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் கைதிகள் திறந்த வெளியில் சுதந்திரமாக உலாவ முடியும்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி யஷ்பால் சிங்கால் கூறுகையில், அரியானா மாநிலத்திலேயே முதன்முறையாக, இப்போதுதான் அம்பாலாவில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அரியானாவில் அமைய இருக்கும் திறந்த வெளி சிறைச்சாலையானது மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள திறந்த வெளி சிறைச்சாலையை விட மேம்பட்டதாக இருக்கும்.
இங்கு குறைந்த அளவே சிறை பாதுகாவலர்கள் ஈடுபடுவர். நன்னடத்தை கொண்ட கைதிகள் மட்டுமே இங்கு அடைக்கப்பட உள்ளனர். எனவே இங்குள்ள கைதிகள் மற்ற கைதிகளை விட சற்று சுதந்திரமாக வெற்று வெளியில் உலாவும் வைகையில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
மேலும் அரியானா சிறைச்சாலைகில் கைதிகள் மத்தியில் பெருகி வரும் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது.
சோனிபட் மற்றும் ரோட்டக் ஆகிய சிறைச்சாலைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணியை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மேலும் அவர் கூறினார்.