சென்னை,
முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்து உள்ளது.
முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க தனியார் நிறுவன வல்லுநர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்தி பரப்புவோரின் சமூக வலைதள முகவரிகளை முடக்குவது தொடர்பாகவும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் அவரது உடல்நலம் குறித்து அவ்வப்போது சமுக வலை தளங்களில் வதந்திகள் பரவி, பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் அறிக்கைகளில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், இன்னும் சிலநாட்கள் மருத்துவமனையில் தங்கி முழுமருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இது போன்ற சம்பவங்களில் வேறு எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கப்பட்டுள்ளது