கடந்த 22ம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் சொல்லப்பட்டது. ஆனால் அவ்வப்போது அறிக்கைகள் வந்ததே தவிர, தொடர்ந்து மருத்துவமனையில் முதல்வருக்கு சிகிச்சை தொடர்ந்தது.
காவிரி பிரச்சினை குறித்து அதிகாரிகளுடன் மருத்துமனையிலேயே ஆலோசனை நடத்தினார் என்று செய்தி வெளியானது. அதே நேரம், முதல்வரை சந்திக்க மருத்துவமனை சென்றவர்கள் மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து திரும்பினார்கள். முன்னதாக, முதல்வரின் தற்போதைய புகைப்படங்களை வெளியிடச்சொல்லி அறிக்கை விடுத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உட்பட பிற கட்சித் தலைவர்கள் சிலரும் தேவையற்றது என்றனர்.
இதற்கிடையே முதல்வர் உடல் நலம் பற்றி வதந்திகள் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தின. சமூகவலைதளங்களில் முதல்வர் உடல் நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்தது. மேலும், வதந்தி பரப்பும் ஐம்பது பேரை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது.
இடையில், முதல்வர் ஜெயலலிதா தான் நலமுடன் இருப்பதாக பேசுவது போல ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அது முதல்வரின் குரல் அல்ல என்பது உறுதியானது. அது முன்னாள் அமைச்சர் வளர்மதியின் குரல் என்று இன்னொரு வதந்தி பரவியது.
இந்த நிலையில் வீடியோ ஒன்று பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மருத்துவமனையில் ஜெயலலிதா நடந்து வரும் காட்சி அதில் உள்ளது. மொத்தமே பத்து விநாடிகள்தான்.
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ.ராமசாமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை நலம் விசாரிக்க ஜெயலலிதா சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இது. அதை இப்போது எடுத்தததுபோல பரவவிடுகிறார்கள்.
“முதல்வர் உடல் நிலை சரியில்லை என்று வதந்தி பரப்புவோர் ஒருபுறம். இன்னொரு புறம், அவரது ஆதரவாளர்கள் முதல்வர் முழு நலமுடன் இருக்கிறார் – நடமாடுகிறார் என்று நிறுவ முயல்கிறார்கள். இதையடுத்தே மிமிக்ரிசெய்து முதல்வர் போல பேசி ஆடியோவை வெளியிட்டார்கள். தற்போதோ… முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை இப்போது எடுத்தது போல, பரவவிடுகிறார்கள்.
முதல்வர் நலமுடன் இல்லம் திரும்பு வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். அதே நேரம் அவருக்கு எதிராகவோ ஆதரவாகவோ பொய்யான வீடியோவோ ஆடியோவோ வெளியிடுவது எதுவானாலும் தவறுதான். இப்படி வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.