நெட்டிசன்:
மாறன் தானப்பன் (Maran Thanappan) அவர்களின் முகநூல் பதிவு:
நேற்று ( 06.10.2016) வியாழக்கிழமை இரவு… கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் நெய்வேலி CTO அலுவலகம் எதிரில் ஒரே கும்பல் என்னவென்று வாகனத்தை நிறுத்தி பார்வையில் சாலையோரத்தில் ஒருவர் விபத்துக்குள்ளாகி படுத்து கிடந்தார்.மொபைலை எடுத்து 108 டையல் செய்து கொண்டே அருகில் சென்றால் காவலர்கள் அங்கிருந்தனர் எவரும் அருகில் செல்லாமல் ஒரு அடி தள்ளி….அங்கு இருந்த ஆய்வாளர் டார்ச்சை அடிபட்டவரின் முகத்தில் அடித்துகொண்டு இருந்தார்….
பார்த்த எனக்கு விளங்கி விட்டது உயிர் இல்லை என்று,காயங்களும் இல்லை அவர் வந்த வாகனம் ஒரு கீரல்கூட இல்லாது ஓரத்தில் கிடந்தது.
அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் வழியில் ஒரு மாடு படுத்து கிடந்ததாகவும் அதன் அருகில் இவரும் அடிபட்டு கிடந்ததாகவும் கூறினார்கள்.(சாலையை மாடு கடக்கும் பொழுது இவர் அதன் மேல் இடித்து விட்டார் போலும்) அந்த மாடு சுமார் 20 நிமிடம் நகரமுடியாது கிடந்துள்ளது.
இவரின் காதில் மட்டும் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது,சிறிது நேரத்தில் அங்கு வந்த அவரின் வீட்டார் பதட்டத்துடன் ஓடி வந்தனர்.
“என்னாச்சிங்க.. ஏங்க இங்க படுத்து இருக்கீங்க? இப்பதானே போன் பண்ணி தோச மாவை எடுத்து வை வந்துட்டு இருங்கேன்னு சொன்னிங்க, பெண்ணுக்கு பையன் பாத்திருக்கேன் வந்து சொல்றேன்னு சொன்னீங்க எழுந்திருங்க” என்றும், “சார் உதவி பண்ணுங்க சார்! நிறைய பேருக்கு உதவி செஞ்சிருருக்காருங்க… ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போலாங்க! ப்ளீஸ்ங்க.. வாங்கங்க! ” என்றும் அவரது மனைவி கதறிய பொழுது உடம்பெல்லாம் சில்லிட்டு போய் என்னையரியாமல் கண்கள் கலங்கி விட்டன.
எப்படி சொல்ல… எந்த காயமும் இல்லாத அவர் இறந்துவிட்டார் என்று.
ஹெல்மெட் போடாமல் வந்த காரணத்தால் தலையில் மட்டும் காயம் ஏற்பட்டு இறந்து விட்டார் என்று.
எதுவாயினும் வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்மெட் போட்டு இருந்தால் அவர் நிச்சியம் இரவு வீட்டிற்கு சென்று இருப்பார்.