மகாராஷ்டிர மாநிலம் தானேயில் போலி கால்செண்டர்கள் நடத்தி அமெரிக்கர்களிடம் பண மோசடி செய்த கும்பல் ஒன்று கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் வேலைபார்த்த 600-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ‘நீங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளீர்கள். உங்களை கைது செய்ய காவல்துறை தயாராக உள்ளது. கைது நடவடிக்கையிலிருந்து தப்ப, குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும்’ என மிரட்டுவது வழக்கம். இதனால் மிரண்டுபோன சிலர் இவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் இவர்களுக்கு ஒருநாளைக்கு 1.5 கோடிவரை வருமானம் வந்துள்ளது.
அனைவர் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக மோசடி நடந்து வந்துள்ளது. இவர்கள் தானேயில் மூன்று கால் சென்டர்கள் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்க உளவுத்துறையிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை நடத்திய அதிரடி ரெய்டில் மேற்கண்ட அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவந்துள்ளன.
இந்த மோசடியில் நேரடியாக சம்பந்தப்பட்ட 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 600-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவை சேர்ந்த யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.