சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.
இன்று காலை, கட்சி தொண்டர் திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசும்போது,  மத்திய அரசின் வஞ்சகத்தனமாக போக்கை  விமர்சித்தார்.
அவர் பேசியதாவது:-
காவிரி பிரச்சினையில் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை மவுனமாக இருந்துவிட்டு,  கடைசி நாளில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது என்று கூறுகிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களை வஞ்சிப்பதாக உள்ளது. தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடாகும்.
மத்தியில் ஆளக்கூடிய பா.ஜனதா அரசு எடுத்திருக்கும் இந்த முடிவை கண்டிக்க கூடிய வகையில் நாளை தஞ்சையில் மிகப்பெரிய உண்ணாவிரத அறப் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். அதன் மூலமாக எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க இருக்கிறோம் என்றார்.
மேலும், காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கிறது. ஒன்று சேர்ந்து பிரதமரை சந்தித்து முறையிடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அது போல் எதுவும் நடப்பதில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று வலியுறுத்தியும் இதுவரை அரசிடம் இருந்து பதில் இல்லை.
தமிழக அரசு செயல்படாத காரணத்தால்தான் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தலைவர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.
stalin
முதல்-அமைச்சர் உடல்நல குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவரை குறை கூற விரும்பவில்லை. அவர் பூரண குணம் அடைய வேண்டும்.
அவர் முழுமையாக குணமடைய தலைவர் கலைஞர் முதல் அனைத்து கட்சி தலைவர்களும் அரசியல் நாகரீகத்துடன் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
எனவே ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் ஆட்சிப் பொறுப்பில் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய நிதித் துறை அமைச்சரோ, பொதுப் பணித்துறை அமைச்சரோ அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டலாம்.
பிரதமரை அனைவரும் சேர்ந்து பார்க்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் ஆனால் அப்படி எந்த நடவடிக்கையிலும் அ.தி.மு.க அரசு ஈடுபடவில்லை.
இதற்கு பரிகாரம் காண்பதற்காகவே தஞ்சாவூரில் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்க தி.மு.க ஐகோர்ட்டில் வழக்கு தொடரவில்லை. தேர்தலை முறையாக நடத்துவதற்கும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவும் கோர்ட்டில் தி.மு.க வழக்கு தொடர்ந்தது.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.கவும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து போட்டியிட தயாராகத் தான் இருந்தது.
ஆனால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காது என்று அறிந்தே உயர் நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு உடந்தையாக இருப்பதையே ஐகோர்ட்டு தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
எனவே அ.தி.மு.க ஆட்சி அவலத்துக்கு முடிவு கட்ட,  இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.