சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
முதல்வரின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிடக் கோரிய டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்ததில் பப்ளிசிட்டி தேடும் வேலையை செய்ய வேண்டாம் என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22-ந்தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று டிராபிக் ராமசாமி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதல்வர் உடல்நிலை குறித்து இன்று அறிக்கை அளிக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முதல்வரின் உடல்நிலை பற்றி அறிவிப்பது அவரின் தனி நபர் உரிமை. அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது தனிநபர் சுதந்திரம் இருக்கிறது. இருந்தாலும் அரசின் நிர்வாகத்தை கவனித்து வரும் முதல்வரின் உடல்நிலை குறித்து மக்கள் அறிந்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் நீதிபதிகள் சுந்தரேஷ்,மகாதேவன் கருத்து தெரிவித்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் முதல்வர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். ஆனால் நீதிபதிகள் மருத்துவமனை நிர்வாகம் உடல்நிலை பற்றி அறிக்கை வெளியிட்டாலும், அதை ஏற்றுகொள்ள முடியாது அரசு நிர்வாகம் முதல்வரின் உடல் நிலைபற்றி தெரிவிக்க வேண்டும். அது தான் நம்பக தன்மையாக இருக்கும் என்றனர்.
ஆகவே அரசு இது பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று வெளியிடுவதாக அவகாசம் கோரியிருந்தார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, ஆனால் வழக்கமாக தனது வழக்குக்காக தானே வாதாடும் டிராபிக் ராமசாமி இன்று நீதிமன்றம் வரவில்லை. அவருக்காக வழக்கறிஞர் வாதாடினார்.
அவர் வாதத்தின் இடையே தலையிட்ட, தலைமை நீதிபதி முதல்வர் உடல்நிலை பற்றிய அறிக்கைகள் அவ்வப்போது வெளிவருகிறதே நீங்கள் கவனிக்கவில்லையா என்று கேட்டார். அதற்கு தனது வாதத்தில் பேசிய வழக்கறிஞர் முதல்வரின் உடல் நலபாதிப்பால் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளது என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி அப்படியெல்லாம் முடங்கியதாக தெரியவில்லை வழக்கமான பணிகள் நடந்துகொண்டுத்தான் இருக்கிறது. முதல்வர் உடல்நிலை விஷயத்தில் பப்ளிசிட்டி தேடும் வகையில் இந்த பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது , என்று கூறி தள்ளுபடி செய்தார்.