சென்னை:
தீபாவளி பண்டிகையை ஒட்டி, டாஸ்மாக் விற்பனையை 370 கோடி என்று இலக்கு நிர்ணயித்தது தமிழக அரசு. கடந்த இரண்டு நாட்களில் இந்த இலக்கை எட்டிவிட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழகம் முழதும் அரசே, டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகளை நடத்தி வருகிறது. சுமார் 6000 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் நான்கு வயது குழந்தைகளுக்கு மது புகட்டுவது போன்ற கொடூரங்கள் அரங்கேற ஆரம்பித்தன. பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் மது போதையில் சிக்கியிருப்பது குறித்து செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. பெரும்பாலான குற்றச் செயல்கள், குடும்ப சண்டைகள் மது காரணமாகவே நடப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே, “முழு மதுவிலக்கு வேண்டும்” என்று பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருன்றன. மதுவிலக்கு கோரி, தியாகி சசிபெருமாள் உயிர்விட்ட நிகழ்வும் நடந்தது. “மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறையுங்கள், திறந்திருக்கும் நேரத்தை குறையுங்கள்” என்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் மிகப்பெரிய அபாயம் ஏற்படும்” என்று சட்டசபையிலேயே சொல்லி அதிரவைத்தார்.
இந்த நிலையில் பண்டிகை நாட்களில் அரசே இலக்கு நிர்ணயித்து மது விற்பனையை ஊக்கப்படுத்துவதும் நடந்துவருகிறது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது 313 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து அரசு. தற்போதைய தீபாவளிக்கு 370 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்தது.
தீபாவளி தினத்தன்றும் அதற்கு முந்தையநாளும் தமிழகத்தின் பெரும்பாலான டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு, பல கடைகளில் கூட்டம் முண்டி அடித்தது.
இது குறித்து டாஸ்மாக் வட்டாரத்தில் பேசியபோது, “மழைக்காலம் என்பதால் பீர் விற்பனை சரிவைச் சந்தித்தது. ஆனால் பிராந்தி, ரம், விஸ்கி ஆகியவை பலமடங்கு அதிகமாக விற்பனை ஆகி உள்ளது. நேற்று மதியம் வரையிலான தகவல்படி, அரசு நிர்ணயித்த இலக்கான 370 கோடி ரூபாயை தாண்டிவிட்டது என்றே கணிக்கிறோம்” என்றார்கள்.