சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் இதுவரை நான்குமுறை செய்திக் குறிப்புகளை வெளியிட்டு ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும் வழக்கமான உணவு உட்கொள்வதாகவும் தெரிவித்து வருகிறது.
பத்தாவது நாளான நேற்று மாலை தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துச் சென்றார்.
இந்த நிலையில், பதினோராவது நாளான இன்று ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, சிவிசண்முகம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உட்பட அனைத்து அமைச்சர்களும் அப்போலோ மருத்துவமனை வந்தனர்.
காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும வந்தனர்.
அங்கு அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பிறகு வெளியே வந்த அவர்களிடம் எது குறித்து ஆலைசனை நடந்தது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எவரும் பதில் சொல்லவில்லை.