சென்னை:
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் போஸ்ட்மார்டம் தொடங்கியது. எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இது திட்டமிட்டு செய்த கொலை என்றும், ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. மேலும், ராம்குமார் உடலை டெல்லி எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து பரமசிவம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, ஐகோர்ட் உத்தரவின்படி டெல்லி எய்ம்ஸ் டாக்டர் சுதிர் கே.குப்தா உள்ளிட்ட 5 டாக்டர்கள் கொண்ட குழு, ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வது உறுதியானது.
அதன்படி எய்ம்ஸ் டாக்டர் சுதிர் கே.குப்தா சென்னை வந்து ராம்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை பிரேத பரிசோதனை தொடங்கியது. தடயவியல்துறை தலைவர் செல்வக்குமார் தலைமையில் டாக்டர் சுதிர் கே.குப்தா, டாக்டர் வினோத், டாக்டர் பாலசுப்பிரமணியன், டாக்டர் மணிகண்டராஜா ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.
இதன் காரணமாக ராம்குமாரின் தந்தை பரமசிவம், அவரது வழக்கறிஞர் ராமராஜ், நீதிபதி தமிழ்ச்செல்வி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.