இஸ்லாமாபாத்:
“எங்கள் மீது போர் தொடுத்தால், இந்தியாவை அணுகுண்டு வீசி அழிப்போம்” என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
சமீபத்தில் காஷ்மீர் உரி ராணுவ முகாமில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள் பலியானார்கள். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவிய, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பைசல் உசேன் அவான் ( 20), யாசின் குர்ஷீத் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பான ஆதாரங்களை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் அளித்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “காஷ்மீர் பிரச்சனையில் இருந்து உலகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக, இந்தியாவே, உரி ராணுவ முகாம் தாக்குதலை நடத்தியது.
இத் தாக்குதலுக்கு பழிவாங்குவதாகச் சொல்லி, பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், அந்த நாட்டை நாங்கள் அழிப்போம்.
இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் சந்திப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது. ஷோகேஸில் வைப்பதற்காக நாங்கள், அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கவில்லை. அதைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை பயன்படுத்துவோம். இந்தியாவை அழிப்போம்.
பாகிஸ்தானின் வான் பிரதேசத்தில் இந்தியா அத்துமீறி நுழைந்தால், பாகிஸ்தான் விமானப்படை சரியான பதிலடி தரும்” என்றார்.
பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் வெளிப்படையான இந்த மிரட்டல், உலக அளவில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.