விஜயவாடா:
நிர்வாக ஒதுக்கீடில் சேர்ந்த 200 மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு ஆந்திர வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து விஜயவாடாவில் உள்ள வருமானவரித் துறை அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்தியாவில் நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு வருகிறது..
இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தங்களுக்கு கிடைத்த தகவலின்படி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.
இந்த மாணவர்களின் பெற்றோர்கள் மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிப்பவர்கள் என தெரிய வந்ததுள்ளது.
ஆனால் இவர்களில் 30 சதவிகிதம் பேர்தான் வருமான வரி கட்டுகின்றனர் என்றனர்.
இந்த மாணவர்கள் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, குண்டூர், பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
மேற்கொண்டு இது குறித்து எதுவும் சொல்ல இயலாது என்று கூறினர்.
வருமான வரித்துணை ஆணையர் சுனில் குமார் ஓஜா கூறியதாவது:
இதுகுறித்து தகவல் அனுப்பி உள்ளோம். அவர்கள் சட்டப்படி செப்டம்பர் 30ந்தேதிக்குள் தங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, லோக் சட்டா கட்சி முன்னாள் மாநிலதலைவர் கே சீனிவாச ராவ் கூறியது வருமாறு:
ஆந்திர அரசின் அலட்சியம் காரணமாக இந்த விஷயத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ஆந்திர பிரதேசத்தில் 670 மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் இரவும் பகலும் படித்து போட்டியிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்றும் கூறினார்.