காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் முதலைகள் படையெடுத்து வருவதும், அதை தீயணைப்புத்துறையினர் சென்று பிடிப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது.
காட்டுமன்னார்கோவில் அருகில் குச்சூர் கிராமத்தில் ஊருக்குள் இன்று ஒரு முதலை புகுந்துவிட்டது. பயந்துபோன மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையநிலைய அலுவர் எஸ். சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அறிவழகன், மாரிமுத்து, பன்னீர் செல்வம், ஏகாம்பரம், திருஞான சம்பந்தம் ஆகியோர் சென்று முதலையை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து காட்டுமன்னார்கோவில் பகுதி மக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் ஓடும் வடவாற்றில் முதலைகள் வசிக்கின்றன. மழைக்காலத்தில் அருகிலுள்ள ராஜன் வாய்க்காலில் பல முதலைகள் தங்கிவிட்டன. இவை அவ்வப்போது ஊருக்குள் வந்து பீதியைக் கிளப்புகின்றன. சமீபத்தில் ஏழெட்டு முதலைகள் இப்படி ஊருக்குள் வந்துவிட்டன. காட்டுமன்னார்குடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததும் உடனடியாக வந்து முதலைகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி” என தெரிவித்தனர்.