திரைப்பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துகுமார் மறைந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு இளம் பாடலாசிரியரான அண்ணாமலை மரணமைடைந்தது தமிழ்த்திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 49.
சென்னை. நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலை பகுதியில் வசித்து வந்த அண்ணாமலைக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
நேற்று காலை குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு அண்ணாமலை வீடு திரும்பினார். பிறகு அவரது மனைவி, தான் பணியாற்றும் அலுவலகத்துக்கு கிளம்பினார். மாலையில் பணி முடித்து வந்த அவர், கதவைத் தட்டினார். கதவு திறக்கப்படாததால் பக்கத்து வீட்டினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர்.
தனது அறை படுக்கையில் உறக்கத்திலேயே உயிர் பிரிந்து, இறந்துகிடந்தார்.
பிறகு மருத்துவரை அழைத்து வந்தனர். அண்ணாமலை இறந்து பல மணி நேரம் ஆகிறது என்று மருத்துவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ‘கீழப்பட்டு’ கிராமத்தில் பிறந்த அண்ணாமலை, ஐந்தாம் வகுப்பு வரை அங்கே படித்தார். பிறகு, திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை, படித்தார். மேல்நிலைப் படிப்பை சங்கராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முடித்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கவேண்டும் என்ற விருப்பத்தால், அதே கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார்.
சிறு பத்திரிகைக் கவிதைகளின் புதுப் போக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து அதே கல்லூரியில் எம்.ஃபில். பட்டமும் பெற்றார். தற்போது, சென்னை மாநிலக் கல்லூரியில் முனைவர் (பி.ஹெச்டி) பட்ட ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
பச்சையப்பன் கல்லூரியில் படித்த காலத்தில், ‘சுரேசன்’ என்கிற புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகளும் எழுதிவந்தார். தமிழரசி, தாய் வார இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. தமிழமுது இதழில் ‘வேங்கையின் சபதம்’ என்ற பெயரில், ஈழ மன்னன் எல்லாளச் சோழன் பற்றிய வரலாற்று குறுநாவல் ஒன்றும் எழுதினார்.
பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவரான இயக்குனர் செல்வாவின் தொடர்பு கிடைத்தது. செல்வா இயக்கிய ‘சித்திரப் பாவை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் முதன் முதலில் பாடல் எழுதினார் அண்ணாமலை. தொடர்ந்து, நீலா மாலா, கோகுலம், நரசி, அஸ்திவாரம், செல்லப்பிள்ளை, புதுயுகம், மைதிலி, தங்கம் உட்பட 15 தொலைக்காட்சித் தொடர்களுக்கு பாடல்கள் எழுனார். பக்தி மற்றும் தனிப்பட்ட 25 இசைத் தொகுப்புகளுக்கும் சேர்த்து 200 பாடல்கள் எழுதியுள்ளார்.
இவரது முதல் திரைப்பாடல், நாஞ்சில் கென்னடி இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளிவந்த ‘புதுவயல்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. மனோ, சித்ரா ஆகியோர் பாடினர். தொடர்ந்து பல பாடல்கள் எழுதினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பல வாய்ப்புகளை இவருக்கு அளித்து வந்தார்.
‘வேட்டைக்காரன்’ படத்தில் வந்த ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடல் மூலம் பிரபலமானார்.
இதுவரை வெளிவந்த இவரது திரைப்பாடல்கள் சுமார் அறுபது. அவற்றில் பல பெரும் ஹிட் ஆனவை.
‘பண்ணாரஸ் பட்டு கட்டி, ஜில்லாக்ஸ், ரத்தத்தின் ரத்தமே, என் பேரு முல்லா, நீ சிரிச்சா கொண்டாட்டம், வர்றாளே ஜில்ஜில் சிங்காரி, நண்பனைப் பார்த்த தேதி மட்டும், உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன், கொலக் குத்துக் குத்துறா, இடிச்ச பச்சரிசி, நட்டநடு ராத்திரியை பட்டப் பகல் ஆக்கிவிட்டாய், இத்தனை யுகமாய் எங்கே இருந்தாய்’ போன்ற பாடல்கள் இவர் எழுதியவையே.
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் போல இவரும் பத்திரிகையில் பணியாற்றியவரே. ஆனந்த விகடன் இதழில் பிழை திருத்துநராக பணியாற்றினார்.
இறுதிச் சடங்கு இன்று (28.09.2016) மாலை நடைபெறும் என்று அண்ணாமலையின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முகவரி: பால பத்மம் அபார்ட்மெண்ட்ஸ், கதவு எண்: 129/64,, 11வது அவின்யூ, ஹாரிங்டன் சாலை, சென்னை – 30. (இந்தியன் வங்கி எதிரில், பச்சயப்பா கல்லூரி அருகில்)