ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின், கதைத் திருட்டு வழக்கு, நாளை 27-ந் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாராணைக்கு வரும் நிலையில், ஷங்கர் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடித்த எந்திரன் திரைப்படத்தை கலாநிதி மாறன் தயாரித்தார். கடந்த 2010ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், இதற்கு முன்பு வெளியான அனைத்து தமிழ்த் திரைபடங்களின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996ம் ஆண்டு வெளியான தன்னுடைய “ஜூகிபா” என்ற எனது சிறுகதையை திருடி எந்திரன் கதை அமைக்கப்பட்டதாகவும், தனக்கு படதயாரிப்பு நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதெல்லாம் இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி தரப்பு உரிய பதில் அளிக்காமல் இழுத்தனடித்தன. இதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்புக்கு உயர்நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
ஆனாலும், கடந்த 15-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் ஷங்கர் மற்றும் கலாநிதி தரப்பு ஆஜராகவில்லை. அடுத்த விசாரணையில் ஆஜராவதாக வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை, 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாளையாவது ஷங்கர் கோர்ட்டில் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.