karnata_
டில்லி:
மிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
காவிரியில், தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு கடந்த  20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல்,  தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடக எதிர்க்கட்சிகள், விவசாயிகள், கன்னட அமைப்பினர் எதிர்ப்பை காரணமாக சொல்லி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை.
கர்நாடக முதல்வர் சித்தராமையும் தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக அறிவித்தார்.  மேலும் கடந்த 23-ந் தேதி கர்நாடக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என தீர்மானமும் நிறைவேற்றினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக தலைமைச்செயலாளர், கர்நாடக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதினார். அதில்,கர்நாடக அரசின் செயல் உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், நீதி மன்ற அவமதிப்பு செயல் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு நாளை (செவ்வாய்க் கிழமை)  மீண்டு சுப்ரீம் கோர்ட்டில்  விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடக அரசின் செயல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், இந்த விவகாரத்தில் மத்தியஅரசின் மவுனம் கேள்விக்குறியாகி உள்ளது.  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த முயற்சி செய்யாத மத்திய அரசின் நீர்வளத்துறை  செயல் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இதற்கிடையில், தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கும்படி பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி கர்நாடக அரசு இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது.
அந்த மனுவில்,  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாதது குறித்தும்,  கோர்ட்டு உத்தரவை எதிர்த்து கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்தும் சீராய்வு மனுவில் கர்நாடக அரசு குறிப்பிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில்,  கர்நாடக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில்  ஆஜராகி வரும் மூத்த வக்கீல் நாரிமனை கர்நாடக அமைச்சர் எம்.பி. பட்டீல், தலைமை செயலாளர் அரவிந்த் ஜாதவ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்தும் நாரிமனுடன் மந்திரி எம்.பி. பட்டீல் ஆலோசித்ததாக தெரிகிறது.