சென்னை:
கோவையில் சட்டத்துக்கு புறம்பாக நடப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேட்டுகொண்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியை சார்ந்த சசிகுமாரின் மரணத்தையொட்டி சில சமூக விரோதிகள் சேர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் வன்முறை செயல்களில் ஈடுபட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
வியாபாரிகளின் கடைகளை அடித்து நொறுக்கியும், காவல்துறை வாகனங்களை அடித்தும், தீ வைத்தும், காவலர்கள் மீது கல் எறிந்தும், அதேபோல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை தாக்கி பொது சொத்துகளை அடித்தும், தீ வைத்தும் நாசம் செய்யப்பட்டுள்ளன.
ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் உட்பட்டு பொதுமக்களுக்கு தொல்லை தராத விதத்திலும், பொது சொத்துகள் மற்றும் அரசு சொத்துகளை நாசப்படுத்தாத விதத்திலும், பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் தாக்காமலும், ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த வேண்டும்.பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.