கோவை:
கோவையில் இன்று மாலை அனைத்து கட்சி சார்பாக, சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு மற்றும் வன்முறை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது.
கோவையில் இந்துமுன்னணி நிர்வாகி சசிகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கலப்புமணம் புரிந்த அவர், அது தொடர்பான பிரச்சினையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் மாற்று மதத்தவர் இந்த கொலையில் ஈடுபட்டதாகக் கூறி இந்து அமைப்புகள் சில, கோவையில் கலவரத்தில் ஈடுபட்டன.
கடைகள் தாக்கப்பட்டன, காவல்துறை வாகனம் உட்பட பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது. சிங்காநல்லூர் உட்பட கோவை கிழக்கு பகுதியில் ஓரளவு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கொலை நடந்த துடியரூர் சுப்பிரமணியம் பாளையம் மற்றும் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. அங்கு காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ரயில்வே ஸ்டேசன், கோர்ட், ஜி.ஹெச், பெரிய கடை வீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மிகச் சில கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. சாலைகளில் வாகனப்போக்குவரத்து குறைவாகவே உள்ளது.
கொலை நடந்த துடியலூர் சுப்பிரமணியம் பாளையம் முஸ்லிம்கள் அதிகம் ரயில்வே கோர்ட் ஜிஹெச் பெரிய கடை வீதி வாகன போக்குவரத்து மிகக் குறைவாகவே இருக்கிறது.கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க., பா.ஜ.க. தவிர்த்து, தி.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உட்பட அனைத்து கட்சிகளும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தன.
அதில், “சசிகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இந்த கொலையை காரணமாக வைத்து கலவரத்தில் ஈடுபட்டோரை இனம்கண்டு உடனடியாக கைது செய்ய வேண்டும். கூடுல்தல் காவலர்களை கோவை பகுதியில் பணியில் ஈடுபடுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
மனு அளித்த கட்சிகள் அனைத்தும் இன்று மாலை, சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு மற்றும் வன்முறை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவதாக அறிவித்துள்ளன.
இது குறித்து கோவை மாவட்ட த.மு.எ.ச.க. தலைவர் வழக்கறிஞர் மு.ஆனந்தன் நம்மிடம் தெரிவித்ததாவது:
“இன்று மாலை 4 மணிக்கு கோவை, செஞ்சிலுவைச் சங்கம் அருகில்
சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு மற்றும் வன்முறை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க, தவிர்த்த பிற கட்சிகள் அனைத்தும் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளன. மேலும் பல சமூக நல அமைப்புகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றன.
சமுக நல்லிணக்கத்தில் அக்கறை உள்ள அனைவரும் இந்த உறுதிமொழி ஏற்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என்று மு. ஆனந்தன் தெரிவித்தார்.