சென்னை:
கோவையை  வன்முறை நகரமாக்க துணை போகாதீர்கள், வளர்ச்சிக்கான நகரமாக திகழ வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்து முன்னணி சசிகுமார் இறுதி ஊர்வலத்தின்போது கோவை பகுதியில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டது.  சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  சாலையின் இருபுறங்களிலும் மூடப்பட்டிருந்த கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஏ.டி.எம். மையங்கள், மருத்துவமனைகள் மீது சரமாரியாக கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. கோவை துடியலூர்  காவல் துறை ஜீப்பை  ஒரு கும்பல் அதற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. இந்த செயலால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்பட்டு முடங்கி கிடந்தனர்.
ramdoss_pmk
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் நேற்று முன்நாள் இரவு கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நகரில் வன்முறை வெடித்திருப்பது கவலையும், வேதனையும் அளிக்கிறது. சசிக்குமாரின் கொலை, அதைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை ஆகிய இரண்டுமே கண்டிக்கத்தக்கவை ஆகும்.
இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமாரின் படுகொலை மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்க கொடிய நிகழ்வு ஆகும். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதும், அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதும் தான் தீர்வு ஆகும்.
இந்தக் கடமையை செய்ய காவல்துறையினருக்கு அனைத்துத் தரப்பினரும் துணை நிற்க வேண்டும்.  அதற்கு மாறாக வன்முறையில் ஈடுபடுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. வன்முறைக்கு வன்முறை என அனைவரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.
சசிக்குமாரின் கொலைக்காக தண்டிக்கப்பட வேண்டியது கொலையாளிகள் தானே தவிர, அப்பாவி மக்களும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழிபாட்டுத் தலங்களும் அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அமைதியை ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தின் சின்னமாக திகழும்  கோவை நகரத்தை வன்முறை நரகமாக மாற்றும் சதிக்கு எவரும் துணை போகக்கூடாது.
அதேநேரத்தில் கோவையை வளர்ச்சிக்கான நகரமாக உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்பது தான்.
காவல்துறையினரும் தங்கள் கடமையை உணர்ந்து, சசிக்குமார் படுகொலைக்கும், வன்முறைகளுக்கும் காரணமானவர்களை கைது செய்வதுடன், கோவையை அமைதி நகரமாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.