ஓசூர்:
தமிழக கர்நாடக எல்லையான ஜூஜுவாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக லாரி ஓட்டுநர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏராளமான வாகனங்கள் தீவைத்தும் கொளுத்தப்பட்டன.

கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால்க தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழக கர்நாடக எல்லையான ஜூஜூவாடியில் ஏராளமான தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்குகள் தேக்கமடைந்துள்ளதாக கூறியுள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசயி நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலை கைவிடுமாறு அறிவுறுத்தினர். இதனாலும் லாரி ஓட்டுநர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி லாரி ஓட்டுநர்களைக் கலைத்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Patrikai.com official YouTube Channel