டில்லி:
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து நீர் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்த கர்நாடக குழுவுடன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியின் செயல்பாடுகள் தமிழகத்திற்கு எதிராக இருக்கின்றன. காவிரி விவகாரத்தில் மத்திய மோடி அரசுக்கும், கர்நாடகத்திற்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறார்.
இந்த நிலையில் உமா பாரதியை கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார், ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் அடங்கிய குழு சந்தித்து தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். அந்தக் குழுவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம் பெற்றிருந்தார்.
நிர்மலா, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதுவும் காவிரி படுகை மாவட்டமான திருச்சிதான் இவரது முன்னோர்கள் வாழ்ந்த ஊர். இப்படிப்பட்டவர், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கை தர மறுக்கும் கர்நாடக குழுவுடன் சென்று உமாபாரதியை சந்தித்திருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.