டில்லி:
ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் 11 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 22 விளையாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் புதிய வரலாறு படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா 43வது இடத்தைப் பிடித்தது. இறுதியில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தலைமையில் தேசிய கொடியை பிடித்து அணிவகுத்து வந்தனர்.
போட்டி முடிவடைந்ததை அடுத்தது, இந்திய வீரர்கள் நேற்று அதிகாலை 3 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட நான்கு வீரர்களும் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
’’தங்கள் அயராத உழைப்பால் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்’’ என இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.