கோவை:
கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மர்ம நபர்களால்  நேற்று இரவு  வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளராக  இருந்து வந்தவர் சசிகுமார் (36). அவரது வீடு, கோவை, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டர்மில் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ளது.
இந்நிலையில், சசிகுமார் இருசக்கர வாகனத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்கள் இரண்டில் அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் நால்வர், அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர். பிறகு, சசிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த சசிகுமாரை, அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது சடலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
sasikumarஇந்தத் தகவல் பரவியதும் இந்து முன்னணியினர், பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், சசிகுமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை முன்பாகவும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாகவும் திரண்டு, காவல் துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சசிகுமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்த கோவை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜை இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் முற்றுகையிட்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு முழக்கமிட்டனர்.
கொல்லப்பட்ட சசிகுமாருக்கு யமுனா என்ற மனைவி உள்ளார். இவரது சகோதரர் சுதாகர் பாஜக இளைஞரணியின் கோவை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
சசிகுமார் படுகொலையை அடுத்து கோவை மாநகரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, சசிகுமாரின் உடலைப் பார்வையிட வந்த மாநில இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரணியம், கோவையில் வெள்ளிக்கிழமை பந்த் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.