சென்னை:
விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது உருவ படம் எரிக்கப்ப்ட்டது.
ரஜினியின் இரண்டாவது மகளும் , கோச்சடையான பட இயக்குநருமான செளந்தர்யா விலங்குகள் நல வாரியத்தின் தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
திரைப்படங்களில் விலங்குகள் தோன்றும் காட்சிகள் குறித்த ஆலோசனைகளை திரைத்துறையினருக்கு செளந்தர்யா வழங்குவார் என்கிற ஆலோசனையுடன் விலங்கு நல வாரியத்தின் தூதராக செளந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டார்.
இவர் என்ன செய்தார்…? எதற்காக இந்த பதவி என பலரும் ஆளாளுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்தனர். இதுபற்றிய விமர்சனம் சமுக வலைதளங்களில் பலவாறாக பகிரப்பட்டு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
விலங்கு நல வாரிய தூதர் பதவி நியமனத்தை எதிர்த்து திருச்சியில் தமிழர் வீரவிளையாட்டுப் பேரவைக் கழகமும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அப்போது, தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு நடைபெறுவதைத் தடுத்த விலங்கு நல வாரியத்தின் தூதராக செளந்தர்யா பணியாற்றக்கூடாது. அப்பதவியை உடனே ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். அவரது உருவப் படங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
தமிழர் வீரவிளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ் இதுபற்றி கூறும்போது:
முரட்டுக் காளை படத்தில் காளையை அடக்குவது போல நடித்து, அதனால் கிராமப்புறங்களில் அதிக ரசிகர்களைப் பெற்றவர் ரஜினி.
தமிழர்களின் ஆதரவுடன் பெரிய நட்சத்திரமான ரஜினியின் மகளான செளந்தர்யா, விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியது. ஏற்றுக்கொள்ளமுடியாதது.
அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இதை ரஜினி வலியுறுத்தவேண்டும்.
இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்று கூறினார்.