பெங்களூரு:
காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு 10 நாட்கள் தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று டில்லியில் கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும், விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கன்னட வெறியர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபடக்கூடும் என்கிற அச்சம் பெங்களூருவில் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதலே பெங்களூருவில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பெங்களூர் காவல்துறையினர், தங்களது ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்களுக்கு சில கோரிக்கைகளை விடுக்க தொடங்கியுள்ளனர்.

அவறறில் சில..
சமூக வலைத்தளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையில் காவிரி பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரில் பந்த் போன்ற நிலை காணப்படவில்லை. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் அமைதி நிலவுகிறது. போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவசர உதவிக்கு 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஆயுதப்படை , ரிசர்வ் படை வீரர்கள் உட்பட, பெங்களூரில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் அதிரடி விரைவுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel